search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் தற்கொலை ஏன்? - காரணத்தை கண்டறியும்படி அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவு
    X

    விவசாயிகள் தற்கொலை ஏன்? - காரணத்தை கண்டறியும்படி அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவு

    கர்நாடகத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்த பிறகும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது ஏன்? என்பதற்கான காரணத்தை கண்டறியும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி குமாரசாமி உத்தரவிட்டார். #Kumaraswamy
    பெங்களூரு:

    முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் அவர் மாவட்ட கலெக்டர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அதன் விவரம் வருமாறு:-

    1. பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு இயற்கை பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளுக்கு உட்பட்டு நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    2. பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை இருப்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வழங்க வேண்டும். அந்த பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    3. கர்நாடகத்தில் 12 மாவட்டங்களில் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. அங்கு வறட்சி ஏற்பட்டால் நிவாரண பணிகளை மேற்கொள்ள தேவையான அறிக்கையை தயாரிக்க வேண்டும்.

    4. ரூ.48ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி மற்றும் பிற உதவிகள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு இருந்தும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடப்பது ஏன்?. இதற்கு காரணம் என்ன என்பதை கலெக்டர்கள், அதிகாரிகள் கண்டறிய வேண்டும்.

    5. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால், பிரேத பரிசோதனை அறிக்கையை விரைவாக பெற்று அவர்களின் குடும்பங்களுக்கு அரசின் உதவிகளை விரைவாக வழங்க வேண்டும்.

    6. கர்நாடகத்தில் பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் 67 லட்சம் பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதில் சில பிரச்சினைகள் இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. அந்த பயனாளிகளின் ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைத்து அடுத்த 3 மாதங்களில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

    7. ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அனைத்து கிராமங்களிலும் மயான வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

    8. ‘அக்ரம-சக்ரம’ திட்டத்தில் வரும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    9. வன உரிமை சட்டத்தின்படி வரும் மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வசதியாக சட்ட திருத்தம் செய்ய சமூக நலத்துறை அதிகாரிகள் ஒரு அறிக்கையை தயாரித்து வழங்க வேண்டும்.

    10. நில பிரச்சினைகளை தீர்க்க நில அளவையாளர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இந்த பற்றாக்குறையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    11. பயிர் விளைச்சல் குறித்து விவரங்களை தெரிவிக்க தனியாக ஒரு செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளே தங்களின் செல்போனில் புகைப்படம் எடுத்து அதை அந்த செயலியில் பதிவேற்றம் செய்ய கலெக்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    12. மண்டியா, ராமநகர், பெலகாவி ஆகிய மாவட்டங்களில் வருவாய் குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகளவில் நிலுவையில் உள்ளன. அந்த மனுக்கள் மீது அடுத்த ஒரு மாதத்தில் கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    13. கொப்பல் மாவட்டத்தில் ஓய்வூதிய திட்டத்தில் சேருவதற்கான முகாம் நடத்தப்பட்டது. 2 முறை இந்த முகாம் நடத்தப்பட்டும், அந்த மாவட்ட மக்கள் மனு கொடுக்க முன்வராதது ஏன்?. இதுபற்றி சம்பந்தப்பட்ட கலெக்டர் அறிக்கை வழங்க வேண்டும்.

    14. புதிதாக அறிவிக்கப்பட்ட வருவாய் கிராமங்களை அமைக்கும் பணியை அடுத்த 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.

    15. 14 தாலுகாக்களில் மினி விதான சவுதா கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    16. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறந்தவெளி கழிவறை இல்லாத மாநிலமாக கர்நாடகத்தை அறிவிக்க வேண்டும். இன்னும் 10 மாவட்டங்களில் கழிவறை கட்டும் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. அந்த பணிகளை அடுத்த ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும். வருகிற அக்டோபர் 2-ந் தேதி திறந்தவெளி கழிவறை இல்லாத மாநிலமாக கர்நாடகம் அறிவிக்கப்பட வேண்டும். இதை மனதில் வைத்து அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்.

    17. மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் அங்கன்வாடி கட்டிடங்கள், பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணிகளை மேற்கொள்ள முடியும். இதற்கு கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி உத்தரவிட்டார்.  #Kumaraswamy

    Next Story
    ×