search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாவூத் இப்ராகிம் - சகோதரர்கள் மீது மராட்டிய போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
    X

    தாவூத் இப்ராகிம் - சகோதரர்கள் மீது மராட்டிய போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

    மிரட்டி பணம் பறித்தது தொடர்பான வழக்கில் தாவூத் இப்ராகிம் அவரது தம்பி இக்பால் கஸ்கர் மற்றும் அனீஸ் இப்ராகிம் ஆகியோர் மீது மராட்டிய மாநில போலீசார் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
    மும்பை :

    இந்தியாவில் நடைபெற்ற 1993 மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்கள் உள்பட பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதன்பேரில் பாகிஸ்தானிடம் தகவல்கள் வழங்கியும், அந்த நாடு தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை. அத்துடன் தங்கள் நாட்டில் அவர் இல்லவே இல்லை என உறுதிபட மறுத்து வருகிறது.

    உலக அளவில் 2–வது மிகப்பெரும் கோடீஸ்வர குற்றவாளியான தாவூத் இப்ராகிமை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்து உள்ளது. இவரது தம்பி இக்பால் கஸ்கர் மும்பையில் வசித்து வருகிறார். தாவூத் இப்ராகிமின் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களை இவர் கண்காணித்து வருகிறார்.  

    மும்பை, தானேவில் உள்ள கோரை பகுதியில் 38 ஏக்கர் நிலம் கைமாற்றப்பட்டது தொடர்பாக இக்பால் கஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் பிரபல கட்டுமான தொழிலதிபர் ஒருவரை மிரட்டி ரூ.3 கோடி பணம் பறித்துள்ளார். கட்டுமான அதிபர் தானே பகுதி போலீசாரிடம் கடந்த வருடம் அளித்த புகார் அடிப்படையில் இக்பால் கஸ்கரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையின் போது இக்பால் கஸ்கர் மட்டுமல்லாது தாவூத் இப்ராகிம் மற்றும் அனீஸ் இப்ராகிம் ஆகியோரும் மிரட்டி பணம் பறித்த விவகாரத்தில் ஈடுபட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இந்நிலையில், தாவூத் இப்ராகிம், இக்பால் கஸ்கர் மற்றும் அனீஸ் இப்ராகிம் ஆகியோர் மீது தானே போலீசார் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். தாவூத் தரப்பு மிரட்டி பணம் பறித்தது தொடர்பான அனைத்து ஆதாரங்களுடனும் இந்த குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

    தானே காசர்வடவலி பகுதியை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளரிடம், தாவூத் இப்ராகிம் பெயரை சொல்லி மிரட்டி, ரூ.30 லட்சமும், ரூ.5 கோடி மதிப்பிலான 4 வீடுகளையும் கடந்த ஆண்டு அபகரித்த வழக்கில் இக்பால் கஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.    
    Next Story
    ×