search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் மாளிகைக்குள் போராட்டம் நடத்த கெஜ்ரிவாலை அனுமதித்தது யார்? - டெல்லி ஐகோர்ட்
    X

    கவர்னர் மாளிகைக்குள் போராட்டம் நடத்த கெஜ்ரிவாலை அனுமதித்தது யார்? - டெல்லி ஐகோர்ட்

    டெல்லி கவர்னர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இதற்கான அனுமதி அளித்தது யார்? என டெல்லி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. #DelhiHC #Kejriwal
    புதுடெல்லி:

    டெல்லியில் அரசு தலைமை செயலாளர் அன்ஷு பிரசாத் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகுதிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மந்திரிகளை அதிகாரிகள் சந்திக்க மறுப்பதாகவும், இதனால் அரசின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும் துணைநிலை கவர்னர் அனில் பைஜாலை கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டார். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்ந்து மந்திரிகளை புறக்கணிக்கின்றனர்.

    இந்த நிலையில் துணைநிலை கவர்னர் பைஜாலை கடந்த 11-ந் தேதி மாலை கெஜ்ரிவால் சந்தித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும், ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார்.

    பின்னர் கவர்னர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.

    டெல்லி கவர்னர் மாளிகையில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் 3 மந்திரிகள் கடந்த ஒருவார காலமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர குமார் ஜெயின் உடல்நிலை நேற்றிரவு மோசமடைந்ததால் அங்கிருந்து அகற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



    இந்நிலையில், டெல்லி அரசுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுப்பது தொடர்பாக அரசின் சார்பிலும், கெஜ்ரிவால் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக தனிநபரின் சார்பிலும் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே.சாவ்லா, நவீண் சாவ்லா முன்னர் இன்று விசாரணைக்கு வந்தபோது, டெல்லி கவர்னர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இதற்கான அனுமதி அளித்தது யார்? என டெல்லி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

    தர்ணா போராட்டம் நடத்த உங்களுக்கு அதிகாரம் அளித்தது யார்? நீங்கள் கவர்னரின் அலுவலகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறீர்கள். போராட்டம் என்றால் அது கவர்னர் அலுவலகத்துக்கு வெளியேதான் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

    இதற்கிடையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் உள்ளிருப்பு போராட்டம் தொடர்பாக டெல்லி சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜேந்திர குப்தா, இன்று டெல்லி ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்குகளில் எல்லாம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி, மறுவிசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #DelhiHC #Kejriwal

    Next Story
    ×