search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை முதல் 5 நாட்கள் தொடர் மழை பெய்யும்- இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
    X

    நாளை முதல் 5 நாட்கள் தொடர் மழை பெய்யும்- இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

    தென் மேற்கு பருவமழை நாளை முதல் மேலும் தீவிரம் அடையும் என்றும், மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 நாட்களுக்கு பலத்த, மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
    மும்பை:

    தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியது. கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதேபோல் மராட்டியத்தின் கடலோர மாவட்டங்களிலும், தெலுங்கானா, ராயலசீமா கடலோர ஆந்திராவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

    நாளை முதல் தென் மேற்கு பருவமழை மேலும் தீவிரம் அடையும் என்றும், மராட்டியத்தில் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளிலும் கடலோர மாவட்டங்களிலும் நாளை முதல் 5 நாட்களுக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக டெல்லியில் உள்ள இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இதனால் மும்பைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தின் ரத்னகிரி மற்றும் சிந்து துர்க் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மராட்டிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி மும்பை மற்றும் கொங்கன் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


    அப்பகுதியில் அவசர நிலைமைகளை எதிர் கொள்ள தயாராக இருக்குமாறு மாநில பேரிடர் மீட்பு குழுவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மந்த்ராலயா பகுதி கட்டுப்பாட்டு அறைகள், மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி மற்றும் தாசில்தார் அலுவலகங்கள் 24 மணி நேரமும் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    மும்பை வாசிகள் அவசர உதவிகளுக்கு 1916 என்ற எண்ணிலும், புறநகரில் வசிப்போர் 1077 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் இந்த மாதத்தின் மழைப்பொழிவு அளவு 101 சதவீதமாக இருக்கும். ஆகஸ்டு மாதத்தில் இது 94 சதவீதமாக இருக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இன்று காலை 8.30 மணி தொடங்கி 11-ந்தேதி வரை கேரளா, கடலோர கர்நாடகா, வடக்கு உள் கர்நாடகா, தெற்கு உள் கர்நாடகா ஆகிய பகுதிகளில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், நாளை காலை 8.30 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர கர்நாடகாவில் மிதமிஞ்சிய அளவுக்கு பலத்த மழை பொழிவு இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. #MumbaiRain
    Next Story
    ×