search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உறவினர்களே அருகில் வராத நிலையில் நிபா காய்ச்சலில் உயிரிழந்தவர்களுக்கு ஈமச்சடங்கு செய்த மருத்துவர்
    X

    உறவினர்களே அருகில் வராத நிலையில் நிபா காய்ச்சலில் உயிரிழந்தவர்களுக்கு ஈமச்சடங்கு செய்த மருத்துவர்

    நிபா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 12 பேரின் உடல்களுக்கு ஈமச்சடங்கு செய்ய உறவினர்கள் யாரும் முன்வராத நிலையில் அந்த பொறுப்பை மருத்துவர் ஒருவர் ஏற்றுக்கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. #Nipahvirus
    திருவனந்தபுரம் :

    கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 18 பேர் பலியான நிலையில், மேலும் பலர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிகப்பட்டு இறந்தவர்களின் உடலின் அருகில் சென்றால் வைரஸ் தங்களுக்கும் பரவிடும் எனும் அச்சத்தில் இறந்தவர்களின் உடலை பெற்றுக்கொள்ளவும் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தவும் உறவினர்கள் யாரும் முன்வரவில்லை.

    இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த மருத்துவரான ஆர்.எஸ்.கோபகுமார் என்பவர் நிபா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்த 12 பேரின் உடல்களுக்கு ஈமச்சடங்கு செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளார். அதன்படி, 3 உடல்களுக்கு அவர் ஏற்கெனவே ஈமச்சடங்கு செய்து அடக்கம் செய்துள்ளார்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 17 வயது சிறுவனுக்கு ஈமச்சடங்கு செய்த பின்னர் பேசிய மருத்துவர் ஆர்.எஸ்.கோபகுமார், “காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்த சிறுவனின் உடலை அடக்கம் செய்யும் போது அவர்களின் உறவினர்களில் ஒருவரும் அருகே இல்லாமல் இருந்தது எனக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தியது. ஆனால், நான் எதையும் யோசிக்காமல் அந்த சிறுவனுக்கு இந்துமத முறைப்படி ஈமச்சடங்கு செய்து அடக்கம் செய்தேன், இது எனது கடமை” என கூறினார்.

    மேலும் அவர் கூறியதாவது, “எபோலாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் முறையை நான் பின்பற்றினேன். இறந்தவர்களின் உடலை காற்றுபுகாத படி சுற்றி பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு, 10 அடி குழி வெட்டி அதில் 5 கிலோ எடையுடைய பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது” என அவர் தெரிவித்தார்.

    மருத்துவர் ஆர்.எஸ்.கோபகுமாரின் இந்த தன்னலமில்லாத நடவடிக்கை பற்றி அம்மாநில சுகாதார மந்திரி ஷைலஜா சட்டசபையில் நேற்று புகழ்ந்து பேசியதும் குறிப்பிடத்தக்கது. #Nipahvirus
    Next Story
    ×