search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திவால் சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்
    X

    திவால் சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

    பெரு நிறுவனங்கள் திவால் ஆகும் போது வராக்கடன்களை திரும்ப செலுத்த வகை செய்யும் திவால் சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். #PresidentKovind
    புதுடெல்லி:

    பெரு நிறுவனங்கள் தொழிலில் நொடிந்து திவாலாகும் போது, அதன் முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள், கடன் கொடுத்தவர்கள் ஆகியோரும் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனமும் முற்றிலும் முடங்கும் சூழல் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காகவும், அதில் தொடர்புடையவர்களுக்கு உரிய நிதி ஆதாயங்கள் கிடைக்க வகை செய்வதற்காகவும் திவால் சட்டம் கொண்டுவரப்பட்டது. 

    ஆனால், அதில் உள்ள சில அம்சங்களை தவறாகப் பயன்படுத்தி பலர் ஆதாயமடைவது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதில் சில திருத்தங்களை மேற்கொண்டு திவால் அவசரச் சட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொண்டுவரப்பட்டது.

    திவாலான நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தை அணுக அதில் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட ஒரு நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டால், அதன் உரிமையாளர், மற்றொரு நிறுவனத்தின் வாயிலாக அதை ஏலம் எடுக்க அதில் தடை விதிக்கப்பட்டுள்ளது.



    புதிய சட்டத்தின்படி, வாராக் கடன்களை திருப்பிச் செலுத்திய பிறகே நலிவடைந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஏலத்தில் பங்கெடுக்க அனுமதிக்கப்படுவர். இத்தகைய கட்டுப்பாடுகளால் திவால் சட்டத் திருத்தத்தை எவரும் தவறாகப் பயன்படுத்த இயலாத சூழல் உருவாகியுள்ளது. 

    இந்த அவசர சட்டம் மூன்று மாதங்களில் காலாவதி ஆகிவிடும் என்பதால், கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் திவால் சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

    இந்நிலையில், இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் இது நிரந்தர சட்டமாகியுள்ளது.
    Next Story
    ×