என் மலர்
செய்திகள்

முகமூடி, கையுறையுடன் கேரள சட்டசபைக்கு வந்த எம்.எல்.ஏ.வால் பரபரப்பு
கேரள மாநில சட்டசபை கூட்டத்தின்போது நிபா வைரஸ் தாக்கத்தை சுட்டிக்காட்டும் வகையில் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ. முகமூடி, கையுறையுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #keralamla #keralaassembly
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தின் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களிலும் அருகாமையில் உள்ள சில பகுதிகளிலும் கடந்த மே மாதம் 17-ம் தேதி நிபா எனப்படும் கொடிய வைரஸ் பரவத் தொடங்கியது, கடந்த 20 நாட்களில் நிபா காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று கேரள மாநில சட்டசபை கூட்டத்துக்கு வந்த குட்டியாடி தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. பரக்கல் அப்துல்லா, முகமூடி மற்றும் கையுறைகளை அணிந்து வந்தார்.
அவரது செயலுக்கு ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பரக்கல் அப்துல்லாவின் செய்கை மிகவும் உணர்வுப்பூர்வமான முக்கிய பிரச்சனையை பூதகரமாக முயற்சிப்பதாக முதல் மந்திரி பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.
முகமூடி அணிந்து வருவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டிய சுகாதரத்துறை மந்திரி சைலஜா, உறுப்பினருக்கு நிபா நோய்த்தொற்று இருந்தால் அவர் சட்டசபைக்கு வந்திருக்க கூடாது என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் நிபா வைரஸ் பீதியில் முகமூடி அணிந்திருப்பதாகவும், அதை சுட்டிக்காட்டி அரசின் கவனத்தை ஈர்க்கவே முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. பரக்கல் அப்துல்லா, முகமூடி மற்றும் கையுறைகளை அணிந்து வந்ததாகவும் தெரிவித்தார். #tamilnews #keralamla #keralaassembly
Next Story






