search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மத்தியப்பிரதேசம் விவசாயிகளின் 10 நாள் போராட்டம் தொடங்கியது

    மத்தியப்பிரதேசம் மாநில விவசாய சங்கங்கள் அறிவித்திருந்த பத்து நாள் தொடர் போராட்டம் அனைத்து மாவட்டங்களிலும் இன்று தொடங்கியது. #MPFarmersstrike
    இந்தூர்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் விவசாய விளைபொருள் ஏற்றுமதி கொள்கையை நிர்ணயிக்க வேளாண்மைத்துறை ஆராய்ச்சியாளர்களை நியமிக்க வேண்டும். உற்பத்தி கொள்முதலுக்கான அதிகபட்ச ஆதரவு விலையை அறுவடைக்கு 2 மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிக்க வேண்டும்.

    இயற்கை முறையில் மட்டும் வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஏக்கர் ஒன்றுக்கு 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து பத்தாம் தேதிவரை தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக 130 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிசான் கிராந்தி ஜன் அந்தோலன் என்னும் அமைப்பு அறிவித்திருந்தது.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் பத்தாம் தேதி நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் இந்த அமைப்பின் உறுப்பினர் குசும் சாவந்த் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இம்மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று போராட்டம் தொடங்கியது. இன்றிலிருந்து தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த போராட்டத்தின்போது விவசாயிகள் தங்களது விளைபொருட்களை மற்றும் பால் போன்றவற்றை சந்தைகளுக்கு அனுப்ப கூடாது என சங்கத்தின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளதால், காய்கறி மற்றும் தானியங்களின் விலை கணிசமாக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    இந்த தடையை மீறி நீமுச் பகுதியில் சிலர் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முயன்றபோது போராட்டக்காரர்கள் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது மன்ட்சூர் பகுதியில் வெடித்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

    தற்போது, தொடங்கியுள்ள போராட்டமும் வன்முறை களமாக மாறிவிடாதபடி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சி தலைவர்களை உளவுத்துறை காவலர்கள் நோட்டமிட்டு வருகின்றனர். இந்தூர் நகரில் உள்ள மாநில காவல்துறை தலைமை அலுவலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. #MPFarmersstrike 
    Next Story
    ×