search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனி ஒருவனாக நின்று 76 அடி ஆழ கிணறு வெட்டிய முதியவர் - 3 ஆண்டு முயற்சிக்கு வெற்றி
    X

    தனி ஒருவனாக நின்று 76 அடி ஆழ கிணறு வெட்டிய முதியவர் - 3 ஆண்டு முயற்சிக்கு வெற்றி

    மத்திய பிரதேச மாநிலத்தில் ஊர் மக்களின் குடிநீர் பஞ்சத்தை போக்க தனி ஒருவனாக நின்று 76 அடி ஆழ கிணறு வெட்டிய முதியவரின் 3 ஆண்டு முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ளது ஹதுவா கிராமம். இந்த கிராமம் மத்திய பிரதேசத்தின் வறண்ட பகுதியான பண்டல்கன்ட் பிராந்தியத்தில் அமைந்துள்ளது.

    இதனால் இந்த கிராமத்தில் போதிய குடிநீர் கிடைப்பதில்லை. மக்கள் குடிநீருக்காக அலைவது வாடிக்கையாக இருந்து வந்தது. ஊரில் பொதுக் கிணறும் இல்லை.

    2015-ம் ஆண்டு மே மாதம் இங்கு கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அந்த ஊரை சேர்ந்த சீத்தாராம் லோடி ஊரில் கிணறு வெட்டுவது என்று முடிவு செய்தார்.

    தனி ஒரு ஆளாக நின்று கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் அவரது குடும்பத்தினர் அவருக்கு உதவினார்கள்.

    பின்னர் இது வீண் வேலை என்று கூறி அவர்களும் ஒதுங்கிக்கொண்டனர். ஆனாலும், மனம் தளராத சீத்தாராம் லோடி தனியாக கிணறு தோண்டினார். தினமும் காலையில் கிணறு தோண்டும் பணியை தொடங்கி மாலை வரை அதை செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தார்.

    மழை காலத்தில் அந்த கிணறு இடிந்து விழுவதும் வாடிக்கையாக இருந்தது. இவ்வாறு 3 தடவை கிணறு இடிந்து விழுந்தது. ஆனாலும், மனம் தளராத அவர் தொடர்ந்து தோண்டும் பணியில் ஈடுபட்டார்.

    இப்போது 3 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் 76 அடிக்கு கிணற்றை தோண்டி உள்ளார். அதில் தண்ணீர் கிடைக்கிறது. சீத்தாராம் லோடிக்கு தற்போது 71 வயது ஆகிறது.

    இந்த வயதில் அவர் கிணறு தோண்டி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

    இதுபற்றி சீத்தாராம் லோடி கூறும்போது, எனது பணியை பலரும் பைத்தியக்காரத்தனம் என்று விமர்சித்தார்கள். என் குடும்பத்தினர் கூட எனக்கு உதவவில்லை. ஆனாலும், கிணறை தோண்டியே தீருவது என்பதில் உறுதியாக இருந்து பணியை முடித்துள்ளேன் என்று கூறினார்.

    Next Story
    ×