search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வரைவு செயல்திட்டம் இன்று தாக்கல் ஆகிறது - தமிழகத்துக்கு நியாயம் கிடைக்குமா?
    X

    சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வரைவு செயல்திட்டம் இன்று தாக்கல் ஆகிறது - தமிழகத்துக்கு நியாயம் கிடைக்குமா?

    சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல் ஆகும் காவிரி வரைவு செயல்திட்டத்தில் தங்களுக்கு நியாயம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் தமிழக விவசாயிகள் காத்து இருக்கிறார்கள். #CauveryMangementBoard #CauveryDraftScheme
    புதுடெல்லி:

    காவிரி நீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த 6 வாரங்களுக்குள் வரைவு செயல்திட்டம் (‘ஸ்கீம்’) ஒன்றை ஏற்படுத்துமாறு கடந்த பிப்ரவரி 16-ந் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

    அதன்படி, மார்ச் 29-ந் தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து இருக்க வேண்டும். ஆனால் தாக்கல் செய்யவில்லை. ‘ஸ்கீம்’ என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. இதேபோல், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்றாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு கோர்ட்டு அவ மதிப்பு வழக்கு தொடர்ந்தது.

    இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு மே 3-ந் தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் கர்நாடக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்வதை மத்திய அரசு தாமதப்படுத்தி வந்தது.

    இந்த வழக்கு கடந்த 7-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கர்நாடக சட்டசபை தேர்தலை காரணம் காட்டி, மத்திய அரசு மேலும் 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என கோரி புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்தது.

    8-ந் தேதி இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், பிரதமரும், மற்ற மந்திரிகளும் கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு இருப்பதால் மந்திரிசபை கூட்டம் நடைபெறவில்லை என்றும், மந்திரிசபை கூட்டத்தில் வரைவு செயல்திட்டத்துக்கு ஒப்புதலை பெற்று கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் தேவை என்றும் கூறினார்.

    இதற்கு தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, கோர்ட்டு தீர்ப்பு வழங்கினால் அதை நிறைவேற்றியே தீர வேண்டும் என்றும், மீண்டும் காலதாமதம் செய்தால் அது கோர்ட்டு அவமதிப்பாக கருதப்படும் என்றும் கூறிய நீதிபதிகள், மத்திய நீர்வளத்துறை செயலாளர் கோர்ட்டில் ஆஜராகி, வரைவு செயல் திட்டத்தை 14-ந் தேதி தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



    அதன்படி, இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

    வரைவு செயல்திட்டம் தயாராகி விட்டதாகவும், 14-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும், மேலும் கால அவகாசம் கேட்கப்படமாட்டாது என்றும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் ஏற்கனவே கூறி இருந்தார். அதன்படி அவர் இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்கிறார்.

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்துவிட்டதால், மத்திய அரசுக்கு இருந்து வந்த நெருக்கடி தீர்ந்தது. எனவே, மத்திய அரசு மேலும் அவகாசம் கேட்காமல் வரைவு செயல்திட்டத்தை இன்று தாக்கல் செய்ய முடிவு செய்து உள்ளது. அதில் காவிரி நீரை பங்கிட்டு கொள்வது குறித்த விரிவான அம்சங்கள் இடம் பெற்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காவிரி நீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கு கர்நாடகம் ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடவேண்டும் என்று தீர்ப்பு கூறியதோடு, எந்தெந்த மாதங்களில் எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதையும் நிர்ணயித்து இருக்கிறது.

    ஆனால் கடந்த காலங்களில் நடுவர் மன்ற தீர்ப்பின் படியோ, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படியோ கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டது இல்லை. காவிரி நீரில் தமிழ்நாட்டின் பங்கு ஏற்கனவே 192 டி.எம்.சி.யில் இருந்து 177.25 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த 177.25 டி.எம்.சி. தண்ணீரும் முறைப்படி ஒழுங்காக கிடைப்பது வரைவு செயல் திட்டத்தை பொறுத்தே அமையும். எனவே வரைவு செயல் திட்டத்தின் மூலம் தங்களுக்கு நியாயம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்போடு தமிழக விவசாயிகள் காத்து இருக்கிறார்கள். #CauveryMangementBoard #CauveryDraftScheme
    Next Story
    ×