என் மலர்
செய்திகள்

சிறையிலிருந்து பக்தர்களுக்கு ஆடியோ செய்தி அனுப்பிய ஆசாராம் பாபு
சிறுமி கற்பழிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசாராம் பாபு தனது ஆதரவாளருடன் பேசிய ஆடியோ செய்தி இணையதளத்தில் பரவி வருகிறது. #AsaramBapu
ஜோத்பூர்:
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் தன்னைத் தானே சாமியாராக அறிவித்துக் கொண்டு ஆசிரமம் நடத்தி வந்தவர் ஆசாராம் பாபு. இவரது ஆசிரமத்தின் கிளைகள் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.
இதில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இயங்கி வந்த ஆசிரமத்தில் தங்கி இருந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசாராம் பாபு கற்பழித்ததாக கடந்த 2013-ம் ஆண்டு புகார் கூறப்பட்டது.
ஜோத்பூர் கோர்ட்டில் 5 ஆண்டுகள் தொடர்ந்து நடந்து வந்த இந்த வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை (சாகும் வரை சிறை) விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து, ஆசாராம் பாபு, ஜோத்பூரில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தனது ஆதரவாளர்களுக்காக ஆசாராம் பாபு பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில் ஆசாராம் பாபு பேசியிருப்பதாவது:
தீர்ப்பு வழங்கப்பட்டபோது, யாரும் சிறையின் முன்பு கூடாமல், அமைதி காத்தமைக்கு நன்றி. சட்டம் ஒழுங்கை மதித்து நடப்பது மிகவும் அவசியம் என்பதை நானும் பின்பற்றுகிறேன். ஆசிரமத்துக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் சிலர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆசிரமத்தை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள் என்ற செய்தி வந்தது.
அப்படி ஏதும் செய்யாதீர்கள். அவ்வாறு ஆசிரமத்தில் இருந்து யாருக்கும் எந்தவிதமான கடிதமும் வழங்கவில்லை; அனுமதிக்கவில்லை. சிறையில் இருக்கும் என்னுடைய உதவியாளர்கள் சில்பி, சாரத் சந்தா ஆகியோருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முதலில் இருவரையும் வெளியில் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். சிறந்த வழக்கறிஞர்களை நியமித்து, உயர்நீதிமன்றத்தில் வாதட வையுங்கள். முதலில் அவர்கள் இருவரும் வெளியே வந்தபின் எனக்காக வாதிடட்டும். பொய்களுக்குக் கால்கள் கிடையாது. எனவே அது நிலைத்து நிற்கமுடியாது. நமக்கு நல்ல காலம் விரைவில் வரும் பொறுமையாக இருங்கள்” என்று அவர் பேசி உள்ளார்.
சிறையில் தண்டனைக் கைதிகளாக இருப்பவர்கள் இரு தொலைப்பேசி எண்களுக்கு மாதத்துக்கு 80 நிமிடங்கள் அழைப்புச் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி, நேற்று சாமியார் ஆசாராம் பாபு தனது ஆதரவாளர் ஒருவரிடம் பேசியுள்ளார். 15 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த ஆடியோவை அவரது ஆதரவாளர் பதிவு செய்து வெளியிட்டு இருக்க கூடும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #AsaramBapu #tamilnews
Next Story