search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக தேர்தல் வெற்றிக்காக கோவில் கொடியை ஏலம் எடுக்கும் அரசியல்வாதிகள்
    X

    கர்நாடக தேர்தல் வெற்றிக்காக கோவில் கொடியை ஏலம் எடுக்கும் அரசியல்வாதிகள்

    கர்நாடகாவில் கோவில் கொடியை ஏலம் எடுத்தால் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையால் அரசியல்வாதிகள் போட்டி போட்டுக் கொண்டு கோவில் கொடியை ஏலம் கேட்டனர்.
    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 12-ந்தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. மனுதாக்கல் ஏப்ரல் 17-ந்தேதி தொடங்க இருப்பதால் தேர்தல் டிக்கெட் கேட்டு அரசியல்வாதிகளும், நிர்வாகிகளும் கட்சி தலைமையை முற்றுகையிட தொடங்கியுள்ளனர். பல்வேறு வழியில் சிபாரிசு பிடிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கடவுள் நம்பிக்கை கொண்ட அரசியல்வாதிகள் வித்தியாசமான முறையில் தேர்தல் டிக்கெட் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகத்தின் மத்திய பகுதியில் சித்ர துர்கா மாவட்டம் நாயக்கனகட்டி கிராமத்தில் குரு திப்பே ருத்ரசுவாமி கோவில் தேரோட்டம் நடந்து வருகிறது.

    இந்த தேரின் உச்சியில் முக்கோண வடிவிலான கொடியில் சிவலிங்கம் பொறிக்கப்பட்டு இருக்கும். இந்த கொடிக்கு தெய்வீக சக்தி இருப்பதாகவும் யாரிடம் இந்த கொடி இருக்கிறதோ அவர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும். உடல் ஆரோக்கியம் பெருகும் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருந்து வருகிறது.

    இதனால் தேரோட்டம் முடிந்ததும் கொடியை ஏலம் விடும் போது அதை போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுப்பார்கள். ஏலம் எடுப்பவரிடம் கொடி ஒப்படைக்கப்படும்.

    தற்போது கர்நாடக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் நாயக்கனகட்டி கிராமத்தில் தேரோட்டம் முடிந்து கொடி ஏலம் விடப்பட்டது. ஏலம் கேட்க சுற்று வட்டாரப் பகுதியில் இருந்தும், பெங்களூரில் இருந்தும் அரசியல்வாதிகள் குவிந்து இருந்தனர்.

    இதே போல் பக்கத்து கிராமமான வேதவதி ஆற்றங்கரையில் உள்ள ஹிரியூர் கோவில் தேர் கொடியும் ஏலம் விடப்பட்டது. இரு ஏலத்திலும் அரசியல்வாதிகள் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர்.

    எடியூரப்பா முதல்- மந்திரியாக இருந்தபோது அவரது மந்திரிசபையில் சமூக நலத்துறை மந்திரியாக இருந்த டி.சுதாகர் பெங்களூரைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். டி.சுதாகர் ஏற்கனவே 4 முறை இந்த கொடியை ஏலம் எடுத்துள்ளார். கடைசியாக 2013-ம் ஆண்டு ரூ.28 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார்.

    இந்த ஆண்டு ஏலம் கேட்பதில் சுதாகருக்கும், காங்கிரஸ் பிரமுகர் குமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. சுதாகர் ரூ.71 லட்சம் வரை ஏலம் கேட்டார். இறுதியில் காங்கிரசை சேர்ந்த குமார் கூடுதலாக ரூ.1 லட்சம் வைத்து ரூ.72 லட்சத்துக்கு கொடியை ஏலம் எடுத்து விட்டார்.

    பா.ஜனதா முன்னாள் மந்திரி சுதாகர் ஏலத்தில் தோற்றதால் வருத்தத்துடன் அங்கிருந்து வெளியேறினார். ஏலத்தில் வெற்றி பெற்ற குமார் தனக்கு தேர்தல் டிக்கெட் கிடைத்து விடும் மகிழ்ச்சியில் திளைத்தார்.
    Next Story
    ×