search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்த்தி சிதம்பரத்திடம் சி.பி.ஐ. தீவிர விசாரணை- இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்
    X

    கார்த்தி சிதம்பரத்திடம் சி.பி.ஐ. தீவிர விசாரணை- இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்

    பணப் பரிமாற்ற முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். #karthichidambaram
    புதுடெல்லி:

    முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
    மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கடந்த 2007-ம் ஆண்டு வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழ் விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

    மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது, அந்த செல்வாக்கை பயன்படுத்தி அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில் உள்ள அதிகாரிகளுக்கு கார்த்தி சிதம்பரம் கடும் நெருக்கடி கொடுத்து இந்த முறைகேட்டை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதற்கு கமிஷன் கட்டணமாக ரூ.10 லட்சத்தை கார்த்தி சிதம்பரம் பெற்றதாக தெரிய வந்துள்ளது. இதற்கான ஆவணத்தை ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    இதற்கிடையே ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குனர்கள் இந்திராணி முகர்ஜி, பிரீத்தம் முகர்ஜியை கார்த்தி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு பல்வேறு முறைகேடுகளை செய்ததாக சி.பி.ஐ. கருதுகிறது. குறிப்பாக ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் பணப்பரிமாற்றம் முழுவதையும் கார்த்தி சிதம்பரம் மறைமுகமாக கட்டுப்படுத்தி வந்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் நினைக்கிறார்கள்.

    இதற்கிடையே ஐ.என்.எகஸ் நிறுவனம் மத்திய நிதி அமைச்சகம் மற்றும் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெறாமல் ரூ.305 கோடி பெற்றது குறித்து இந்திராணி முகர்ஜி, சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் அளிந்திருந்தார். அந்த வாக்குமூலம்தான் கார்த்தி சிதம்பரம் செய்த முறைகேடுகளை உறுதிப்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்தே சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று மிகவும் திட்டமிட்டு கார்த்தி சிதம்பரத்தை கைது செய்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் உள்ள குடியுரிமைத்துறை அதிகாரிகளின் அறையில் கார்த்தி சிதம்பரத்தை அமர வைத்து சுமார் 2 மணி நேரம் சி.பி.ஐ. அதிகாரிகள் முதல் கட்ட விசாரணை நடத்தினார்கள். பிறகு அவர் டெல்லி அழைத்து சென்று பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சுமித் ஆனந்த் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

    கார்த்தி சிதம்பரத்திடம் விரிவான விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவரை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் நீதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. பணப்பரிமாற்ற முறைகேடு குறித்து கார்த்தி சிதம்பரம் தகவல்கள் தந்து ஒத்துழைக்க மறுப்பதால் அவரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து 15 நாட்களுக்கு விசாரிக்க வேண்டியது அவசியம் என்று சி.பி.ஐ. வக்கீல் வி.கே.சர்மா வலியுறுத்தினார்.

    இதற்கு கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜரான வக்கீல் அபிஷேக் சிங்வி எதிர்ப்பு தெரிவித்தார். கார்த்தி சிதம்பரம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று வாதாடினார்.

    கார்த்தி சிதம்பரம் மாஜிஸ்திரேட்டை பார்த்து, “நான் மற்றவர்களைப் போல இந்துஸ்தான் லீவர் (நாட்டை விட்டு வெளிநாட்டுக்கு ஓடுபவர் அல்ல) அல்ல. நான் இந்துஸ்தான் ரீட்டர்னர். நான் ஒன்றும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய குற்றவாளி அல்ல” என்றார்.
    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட்டு ஒருநாள் மட்டும் சி.பி.ஐ. காவலில் வைத்து கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அனுமதி அளித்தார். வியாழக்கிழமை பிற்பகல் மீண்டும் கார்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

    இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அதிகாரிகள் குழு ஒன்று கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தியது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து முதலீடு பெற்றது பற்றி ஏராளமான கேள்விகள் கேட்டனர்.



    அதுபோல ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் இருந்து வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் பற்றியும் அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பினார்கள். விடிய, விடிய இந்த விசாரணை நடந்தது. பெரும்பாலான கேள்விகளுக்கு கார்த்தி சிதம்பரம் நேரடியாக பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.

    இன்று அதிகாலை மட்டும் சிறது நேரம் கார்த்தி சிதம்பரத்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. பிறகு மீண்டும் அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். கார்த்தியின் விசாரணைக் காவல் முடிவடைந்ததையடுத்து, இன்று பிற்பகல் அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளார்கள்.  

    அப்போது கார்த்தியை மீண்டும் காவலில் விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் அனுமதி கேட்பார்கள். கார்த்தியை சி.பி.ஐ. காவலில் மேலும் விசாரிக்க கோர்ட்டு அனுமதிக்குமா? அல்லது ஜாமீன் வழங்குமா? என்பது அப்போது தெரிய வரும். # Tamilnews
    Next Story
    ×