search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை கட்டிட விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பிளே ஸ்கூல் குழந்தைகள்
    X

    மும்பை கட்டிட விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பிளே ஸ்கூல் குழந்தைகள்

    தெற்கு மும்பையில் இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்டு வந்த மழலையர் பள்ளியில் படிக்கும் சுமார் 50 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தகவல் வெளியாகி உள்ளது.
    மும்பை:

    மும்பையில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த கனமழை காரணமாக பல இடங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

    தெற்கு மும்பையின் சவுகத் அலி ரோட்டில் பென்டி பஜாரில் உள்ள பழமையான 5 மாடி குடியிருப்பில் சுமார் 50 பேர் வசித்து வந்தனர். அந்த குடியிருப்பை சுற்றி தண்ணீர் சூழ்ந்திருந்தது. இன்று காலை அந்த 5 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், இடிந்து விழுந்த கட்டிடத்தில் செயல்பட்டு வரும் மழலையர் பள்ளியில் படிக்கும் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தகவல் தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து ஒரு குழந்தையின் தந்தை கூறுகையில், ‘அந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் பிளே ஸ்கூல் செயல்பட்டு வந்தது. அதில் நான் எனது குழந்தையை சேர்த்திருந்தேன். இன்று காலை குழந்தையை அழைத்துக்கொண்டு வந்தேன். எனது வீடு பக்கத்து தெருவில் இருப்பதால் சீக்கிரமாகவே வந்துவிட்டேன்.

    நான் வந்து பார்க்கும்போது, அந்த அடுக்குமாடி கட்டிடம் என் கண்முன்னே சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுவதை கண்டேன். நல்ல வேளையாக பிளே ஸ்கூல் தொடங்கப்படவில்லை. பள்ளி தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு கட்டிடம் இடிந்து விழுந்ததால், 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×