என் மலர்
இந்தியா

12 சிவசேனா எம்.பி.க்கள் அணிமாறுகிறார்கள்: மக்களவையில் தனித்து செயல்பட போவதாக அறிவிப்பு
- சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 55 பேரில், ஏக்நாத் ஷிண்டே அணியில் 40 பேர் உள்ளனர்.
- சிவசேனா எம்.பி.க்கள் பலரும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவ இருப்பதாக கூறப்படுகிறது.
மும்பை :
மகாராஷ்டிரா அரசியலில் கடந்த மாத இறுதியில் வீசிய சூறாவளியால், சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. சிவசேனாவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தனர். அதன்படி சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் கடந்த மாதம் 30-ந் தேதி பதவி ஏற்றனர்.
சிவசேனா கட்சியின் மொத்த எம்.எல்.ஏ.க்கள் 55 பேரில், தற்போது ஏக்நாத் ஷிண்டே அணியில் 40 பேர் உள்ளனர். எனவே எம்.எல்.ஏ.க்கள் அளவில் கட்சியில் பிளவு ஏற்பட்டது. 3-ல் 2 பங்கிற்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே வசம் இருப்பதால், அவரது அணியே சிவசேனா கட்சியாக சட்டசபையில் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த பரபரப்புக்கு மத்தியில் சிவசேனா எம்.பி.க்கள் பலரும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவ இருப்பதாக கூறப்பட்டது. இந்த தருணத்தில் தான் ஜனாதிபதி தேர்தல் வந்தது. ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான சிவசேனா எம்.பி.க்கள் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் போர்க்கொடி தூக்கினர்.
எனவே எம்.பி.க்கள் அளவில் கட்சி உடைவதை தடுக்க திரவுபதி முர்முக்கு ஆதரவளிக்க சிவசேனா தலைமை முடிவு செய்தது. இருப்பினும் இந்த விஷயத்தில் எம்.பி.க்களின் அழுத்தத்திற்கு பணியவில்லை என்றும், தனது கட்சியை சேர்ந்த பழங்குடியின பிரமுகர்கள் கேட்டுக்கொண்டதால், இந்த முடிவை எடுத்ததாகவும் உத்தவ் தாக்கரே கூறியிருந்தார்.
இந்த நிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே காணொலி மூலம் சிவசேனா எம்.பி.க்கள் கூட்டத்தை நடத்தினர். இதில் சிவசேனாவின் மொத்தம் உள்ள 19 எம்.பி.க்களில் 12 பேர் கலந்து கொண்டனர். இதற்கிடையே சிவசேனாவை சேர்ந்த எம்.பி. ஒருவர் கூறியதாவது:-
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நடத்திய ஆன்லைன் கூட்டத்தில் 12 எம்.பி.க்கள் கலந்து கொண்டோம். நாங்கள் மக்களவையில் தனி அணியாக செயல்பட முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து முறைப்படி கடிதம் கொடுக்க உள்ளோம். மக்களவையில் எங்களது குழுவின் தலைவராக மும்பையை சேர்ந்த எம்.பி.யான ராகுல் செவாலே செயல்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
12 சிவசேனா எம்.பி.க்கள் தனிக்குழுவாக செயல்பட போவதாக அறிவித்து இருப்பது, உத்தவ் தாக்கரேக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.






