என் மலர்
இந்தியா

பெங்களூருவில் குடிநீரை வீணாக்கிய 112 பேருக்கு ரூ.5 லட்சம் அபராதம்
- தோட்டங்கள், வாகனங்கள் சுத்தப்படுத்த பயன்படுத்த கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
- சிலர் குடிநீர் மூலம் வாகனத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் கடந்த ஆண்டு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிட்டது. அதே போல் பெரும்பாலான பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக டேங்கர் தண்ணீரும் அதிகவிலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் பெங்களூருவில் குடிநீர் பிரச்சனை ஏற்படாத வகையில் இருக்க இந்த ஆண்டு பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், கழிவுநீர் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக குடிநீரை குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றப்படி தோட்டங்கள், வாகனங்கள் சுத்தப்படுத்த பயன்படுத்த கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
மேலும் பெங்களூருவில் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய அறிவியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகளும் அறிவித்து உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகள் பெங்களூரு மாநகரம் மற்றும் புறநகர் பகுதியில் பொதுமக்கள் குடிநீர் பயன்படுத்துவதை கண்காணித்து வந்தனர்.
அப்போது சிலர் குடிநீர் மூலம் வாகனத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். மேலும் சிலர் தோட்டத்துக்கும், கட்டுமானத்துக்கும், அலங்கார நீருந்துகளுக்கும் குடிநீரை பயன்படுத்தியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் பெங்களூரு நகரின் தெற்கு மண்டலத்தில் அதிகபட்சமாக 33 பேரும், மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் தலா 28 பேரும், வடக்கு மண்டலத்தில் 23 பேரும் என மொத்தம் 112 பேர் குடிநீரை வீணாக்கியது கண்டறியப்பட்டு அவர்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சத்து 6 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.






