என் மலர்tooltip icon

    கதம்பம்

    அடுத்து என்ன நடக்கும்..?
    X

    அடுத்து என்ன நடக்கும்..?

    • 20.13 கோடி வருடங்களுக்கு முன் திடீர் எனக் கரியமில வாயு பூமியில் அதிகம் தோன்றுகிறது.
    • காரணம் விண்கல் அல்லது பெரிய எரிமலை வெடிப்பால் இருக்கலாம். பூமியில் சுமார் 70 இருந்து 75 சதவிகித உயிரினங்கள் மாண்டன.

    சுமார் 45 கோடி வருடங்களுக்கு முன்பு நம் பூமியில் எரிமலை வெடிப்பு அதிகம் நிகழ்ந்தால் ஒரு பெரிய அழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பூமியில் உள்ள உயிரினங்களில் 57 சதவிகிதம் அழிந்தது. இந்த காலம் புழுக்கள் அதிகம் வாழ்ந்த காலம்.

    பின்னர் 7.5 கோடி வருடங்கள் பெரிய பிரச்சினை எதுவும் இல்லாமல் பூமியில் அமைதி நிலவியது. நண்டு, நத்தைகள் அதிகம் வாழ்ந்த காலம் இது.

    திடீர் என 36 கோடி வருடங்களுக்கு முன் 70 சதவிகித உயிரினங்கள் அழிந்தது. இது எப்படி நடந்தது எனச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. எரிமலை வெடிப்பு அல்லது விண்கல் விழுந்து இந்தப் பெரும் அழிவு நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

    பின்னர் சுமார் 11.5 கோடி வருடங்கள் பூமியில் அமைதி நிலவியது. பல மீட்டர் சுற்றளவு கொண்ட நத்தைகள் இருந்த நேரம்.

    சுமார் 25.2 கோடி வருடங்களுக்கு முன் ஒரு பெரிய எரிமலை வெடிப்பால் பூமியிலிருந்த 83% உயிரினங்கள் செத்து மடிந்தன. இதில் கடலில் வாழ்ந்த உயிரிகளும் தரையில் வாழ்ந்த உயிரினங்களும் அடக்கம்.

    பின்னர் 4 கோடி ஆண்டுகளுக்குப் பூமியில் அமைதி நிலவியது. இந்த காலத்தில் ஆமை மற்றும் முதலை போன்ற உயிரினங்கள் உருவாகிய காலம்.

    20.13 கோடி வருடங்களுக்கு முன் திடீர் எனக் கரியமில வாயு பூமியில் அதிகம் தோன்றுகிறது. காரணம் விண்கல் அல்லது பெரிய எரிமலை வெடிப்பால் இருக்கலாம். பூமியில் சுமார் 70 இருந்து 75 சதவிகித உயிரினங்கள் மாண்டன.

    பின்னர் சுமார் 14.5 கோடி வருடங்கள் பூமியில் அமைதி நிலவியது. இந்த காலத்தைப் பயன்படுத்தி ஊர்வன இனத்தைச் சார்ந்த டைனோசர்கள் பூமியில் பல்கிப் பெருகின. இதன் கட்டுப்பாட்டுக்குள் பூமி இருந்து எனலாம்.

    சுமார் 6.6 கோடி வருடங்களுக்கு முன் ஒரு பெரிய விண்கல் பூமியைத் தாக்க 75% உயிரினங்கள் செத்து மடிந்தன. டைனோசர் கூட்டம் கூண்டோடு செத்து மடிந்தன.

    6.6 கோடி வருடங்களாகப் பூமி அமைதியாக இருந்து வருகிறது. பறவைகளும் பாலூட்டிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தித் தழைக்க ஆரம்பித்தது. மனிதன் பூமியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது போல் தோற்றம் உள்ளது. இதற்குக் காரணம் மக்கள் தொகை தான். தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் பூமியில் இப்போது சுமார் 790 கோடி மக்கள் வாழ்கின்றனர்.

    அடுத்து என்ன நடக்கும்; எப்போது நடக்கும் எனத் தெரியாது. சுமார் 6.6 கோடி ஆண்டுகளாக இது போன்ற பெரிய பிரச்சினை இன்றி பூமி அமைதியாக உள்ளது. ஆனால் அடுத்து மேல் கூறிய ஐந்து பேரழிவு போல் ஏதாவது ஒன்று வரவாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிறது.

    அதாவது சராசரியாக சுமார் 9.5 கோடி வருடங்களுக்கு ஒரு முறை இந்த பூமியில் பேரழிவு ஏற்பட்டுள்ளது . மிகவும் குறைந்த பட்சமாக 4 கோடி வருடத்திலும் அதிக பட்சமாக 14.5 வருடத்திலும் பூமியில் பேரழிவு நடந்திருக்கிறது. ஏது எப்படியோ?அடுத்து என்ன நடக்குமோ? எப்போது நடக்குமோ?

    என்ன பேரழிவு நடந்தாலும் எப்போது நடந்தாலும் அதிகம் பாதிக்கப்படுவது மனிதர்கள் தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆழ்கடலில் வாழ்ந்து வரும் சுறா மீன்கள் பல பேரழிவையும் எதிர் கொண்டு இன்றும் கம்பீரமாக வலம் வருவது மகிழ்ச்சியான செய்தி. மனித இனத்திற்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா?

    இந்த கேள்வி அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் இந்த பூமியில் தோன்றிய உயிரினங்களின் வகைகளில் 95 சதவிகிதம் மேற்கண்ட காரணங்களால் இன்று இல்லை.

    - பேராசிரியர் சி சுதாகர்

    Next Story
    ×