என் மலர்tooltip icon

    கதம்பம்

    சுப்பிரமணியன் பாரதி ஆனது எப்படி?
    X

    சுப்பிரமணியன் 'பாரதி' ஆனது எப்படி?

    • நெல்லையில் சி.எம்.எஸ். கல்லூரியில் சோமசுந்தரம் படித்துக்கொண்டிருந்தபோது, சுப்பிரமணியன் இந்துக்கல்லூரி மாணவனாக இருந்தார்.
    • சோமசுந்தரமும், சுப்பிரமணியனும், தாங்கள் உருவாக்கிய பாடல்களை புலவரிடம் அளித்திருந்தனர்.

    எட்டயபுரம் அரண்மனையில் பணியாற்றி வந்த சின்னசாமி ஐயரின் புதல்வன் சுப்பிரமணியனுக்கும், அரண்மனையில் வளர்ந்து வந்த சோமசுந்தரத்திற்கும் நெஞ்சார்ந்த தோழமை உருவாகியிருந்தது. ஒருவருக்கொருவர் 'சோமு' என்றும் 'சுப்பையா' என்றும் அழைத்துக்கொள்வர்.

    அரண்மனைக்கு வருகை தருகின்ற தமிழ்ப் புலவர்களின் பாட்டுக்களையும், உரையாடல்களையும் கேட்பதில், பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த இருவரும், தமிழ் மொழியின்பால் இளமையிலேயே தணியாத தாகம் கொண்டிருந்தனர். தனியாக அமர்ந்து, தமிழ் நூல்களைக் கற்பதிலும், பாடல்களை உருவாக்குவதிலும் பேரார்வமும், பெரு விருப்பும் பெற்றிருந்தனர்.

    நெல்லையில் சி.எம்.எஸ். கல்லூரியில் சோமசுந்தரம் படித்துக்கொண்டிருந்தபோது, சுப்பிரமணியன் இந்துக்கல்லூரி மாணவனாக இருந்தார். ஒரு சமயம் யாழ்ப்பாணத்திலிருந்து பெரும் புலவர் ஒருவர் நெல்லைக்கு வருகை புரிந்திருந்தார். ஒரு கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக்கொடுத்து, பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு யாழ்ப்பாணத்துப் புலவர் வேண்டினார். கூடியிருந்தோர் தாமியற்றிய பாடல்களைப் புலவரிடம் வழங்கினர்.

    கூட்டத்திற்குச் சென்றிருந்த சோமசுந்தரமும், சுப்பிரமணியனும், தாங்கள் உருவாக்கிய பாடல்களை புலவரிடம் அளித்திருந்தனர். எல்லாப் பாடல்களிலும் இந்த இளைஞர் இருவரின் பாடல்களே மிகச் சிறப்புப் பெற்றவையாகக் கருதப் பெற்று, இருவருக்கும் 'பாரதி' என்று பட்டமளித்து மகிழ்ந்தார் யாழ்ப்பாணத்துப் புலவர்.

    சுப்பிரமணியன் 'சுப்பிரமணிய பாரதி' என்றும், சோமசுந்தரம் 'சோமசுந்தர பாரதி' என்றும் அந்த நாள் முதல் அழைக்கப் பெற்றனர்.

    -குன்றக்குடி பெரியபெருமாள்

    Next Story
    ×