என் மலர்
செய்திகள்

ஹசன் அலி
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் வீடு தாக்கப்பட்டதாக வைரலாகும் தகவல்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஹசன் அலி வீடு தாக்கப்பட்டதாக கூறி தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி தோல்விக்கு அந்நாட்டு வீரர் ஹசன் அலி தவற விட்ட கேட்ச் தான் காரணம் என கடும் விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில், உடைந்த கண்ணாடி கொண்ட வீடு ஒன்றின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஹசன் அலியின் வீடு என்றும், அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து மர்ம நபர்கள் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர் என்றும் வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் தாக்குதலை தொடர்ந்து வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்த இணைய தேடல்களில் வைரல் பதிவுகளில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. ஹசன் அலி குடும்பத்தார் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர்கள் தரப்பில் இருந்து ஹசன் அலி வீட்டின் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. உண்மையில் புகைப்படத்தில் உள்ள வீடு கர்நாடகா மாநிலத்தில் இருக்கிறது.
Next Story