search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் ஆணையம்
    X
    தேர்தல் ஆணையம்

    நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல்

    வேலூர் தேர்தல் முடிந்ததும் காலியாக உள்ள நாங்குனேரி, விக்கரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலின் போது நாங்குனேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் நின்று வெற்றி பெற்றதால் மே 27-ந் தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நாங்குநேரி தொகுதி காலியிடமாக உள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மரணம் அடைந்தார். இதனால் இந்த தொகுதியும் காலியாக உள்ளது.

    இந்த 2 தொகுதிகளுக்கும் வேலூர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்தப்படும் என்று முதலில் எதிர் பார்க்கப்பட்டது.

    ஆனால் வேலூருக்கு மட்டும் தேர்தல் கமி‌ஷன் தேர்தலை அறிவித்தது. 2 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

    வேலூர் தொகுதியில் நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை 9-ந் தேதி நடக்க உள்ளது.

    வேலூர் தேர்தல் முடிந்ததும் காலியாக உள்ள நாங்குனேரி விக்கரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

    டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளை பட்டியல் எடுத்து அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

    காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) கடைசியில் தேர்தல் நடத்தலாமா? என்று ஆலோசித்துள்ளனர்.

    இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி கூறுகையில், பாராளுமன்ற இடைத்தேர்தல் 9-ந் தேதியுடன் முடிந்துவிடுவதால் அதன் பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் காலியாக உள்ள சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்.

    தமிழகத்தை பொறுத்த வரை மே, ஜூன் மாதத்திலேயே 2 தொகுதி காலியாகி விட்டது. நவம்பர் மாதத்திற்குள் இங்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

    தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவ மழை காலம் என்பதால் அதற்கு முன்கூட்டியே இடைத்தேர்தலை நடத்தி முடிக்க (செப்டம்பர்) திட்டமிட்டுள்ளோம்.

    இது குறித்து மாநில அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

    செப்டம்பர் மாதத்தில் திருவிழா, போன்ற நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததால் இடைத்தேர்தலை நடத்தி முடித்துவிடலாம் என கருது கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க., அ.தி.மு.க.வினர் வேலூர் தொகுதியில் லட்சச்கணக்கில் செலவு செய்து விட்டு அவரவர் ஊர்களுக்கு இப்போது தான் திரும்பி உள்ளனர். இந்த நிலையில் அடுத்த மாதம் நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு தேர்தல் வந்தால் செலவுக்கு எங்கே போவது? என்று அரசியல் கட்சியினர் விழிபிதுங்கி உள்ளனர்.

    Next Story
    ×