என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் அடித்துக்கொலை: கொலையாளிகளை கைது செய்யக்கோரி தாசில்தார் அலுவலகம் முற்றுகை
    X

    வாலிபர் அடித்துக்கொலை: கொலையாளிகளை கைது செய்யக்கோரி தாசில்தார் அலுவலகம் முற்றுகை

    • கொலையுண்ட முகேசின் உறவினர்கள் ராமேசுவரம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • முகேசை கொலை செய்த கொலையாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தினர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மேலவாசல் முருகன் கோவிலில் கடந்த 5-ந்தேதி பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். ராமேசுவரம் புதுரோடு ராமகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த முகேஷ்(வயது24) என்பவரும் முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து வந்தார்.

    அவர் என்.எஸ்.கே.வீதியில் சென்றபோது அவர் வைத்திருந்த செல்போன் தவறி கீழே விழுந்து விட்டது. அதனை மாந்தோப்பு பகுதியை சேர்ந்த ஒருவர் எடுத்துச் சென்று விட்டதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த முகேஷ் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த வாலிபர்களிடம் தனது செல்போனை எடுத்திருந்தால் கொடுத்து விடும்படி கேட்டுள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள், முகேசை சரமாரியாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அவரை ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இருந்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து ராமேசுவரம் துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து முகேஷை தாக்கிய மாந்தோப்பு பகுதியை சேர்ந்த பாலமுருகன்(24) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாந்தோப்பு பகுதியை சேர்ந்த ராம்கி(20), கணேஷ்(25), ராம்குமார்(25), புஷ்பராஜ்(18), ராஜகுரு(20), இன்னொரு பாலமுருகன் (25), ரமேஷ், பாரதிராஜா, வினோத்குமார் உள்பட 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் கொலையுண்ட முகேசின் உறவினர்கள் ராமேசுவரம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் முகேசை கொலை செய்த கொலையாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×