என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாசு கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாயம் காப்பீடு செய்திட வேண்டும்: கலெக்டர் அறிவுரை
    X

     கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பான பட்டாசு விற்பனை செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடைபெற்ற காட்சி.

    பட்டாசு கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாயம் காப்பீடு செய்திட வேண்டும்: கலெக்டர் அறிவுரை

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசு கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாயம் காப்பீடு வழங்க கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
    • திறந்தவெளி மைதானத்தில் பட்டாசு கடை வைக்க நடவடிக்கை

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பான பட்டாசு விற்பனை குறித்து ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    சமீபத்தில் பட்டாசு கடைகளில் ஏற்பட்ட வெடி விபத்துக்கள், மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடை வைப்பவர்கள், அரசின் விதிமுறைகள், நிபந்தனைகள் கட்டாயம் பின்பற்றிட வேண்டும். பட்டாசு கடைகளில் அலங்கார விளக்குகள், சீரியல் லைட் ஆகியவற்றின் மூலம் எளிதில் தீப்பெறி ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அதனை பயன்படுத்த கூடாது.

    மேலும், பட்டாசு கடைக்குள் ஏசி, யுபிஎஸ், லெட் ஆசிட் பேட்டரி, டீசல் ஜெனரேட்டர்கள், அகர்பத்திகள், எண்ணெய் விளக்குகள் பயன்படுத்த கூடாது. மது போதையில் உள்ளவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், உடல் ஊனமுற்றவர்களை பட்டாசுகள் இறக்குவதிலோ, கொண்டு செல்வதிலோ ஈடுபடுத்த கூடாது. பட்டாசு கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் கட்டாயம் காப்பீடு செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் உரிமம் வழங்கப்பட மாட்டாது.

    சென்னை போன்ற பெருநகரங்களில் இருப்பது போல், திறந்தவெளி மைதானத்தில் பட்டாசு கடை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு கடைகள் வைப்பதற்கான உரிமம் பெற்ற பிறகே, பட்டாசுக்கள் கொள்முதல் செய்ய வேண்டும். அதிகளவில் பட்டாசுக்கள் கொள்முதல் செய்து இருப்பு வைத்தால், அவை பறிமுதல் செய்யப்படுவதுடன், உரிமம் ரத்து செய்யப்படும். மேலும், தடை செய்யப்பட்ட சீன பட்டாசுக்கள் விற்பனை செய்யக் கூடாது.

    லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் பட்டாசு கடைக்கு அருகில் நிறுத்தபடுவது தவிர்க்கப்பட வேண்டும். மேலும், குழந்தைகளை பட்டாசு கடைகளுக்கு அழைத்து செல்லக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, தனி தாசில்தார் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×