search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனியில் தொழில்முதலீட்டு கழகம் சார்பில் தொழிற்கடன் முகாம்
    X

    கோப்பு படம்.

    தேனியில் தொழில்முதலீட்டு கழகம் சார்பில் தொழிற்கடன் முகாம்

    • தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் நடத்தப்படும் தொழிற்கடன் முகாமினை தொழில்முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
    • தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

    தேனி:

    தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் நடத்தப்படும் தொழிற்கடன் முகாமினை தொழில்முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு மாநில நிதிக் கழகம் ஆகும். 1949ம் ஆண்டு முதல் இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தமிழகத்தின் தொழில் வளர்ச்சி முன்னோடியாக திகழ்கிறது. இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும். தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

    மேலும் இந்த நிறுவனம் கடனுதவிக்கு அப்பாற்பட்ட சேவைகளையும் செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் திண்டுக்கல் கிளை அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் கடந்த 21ந் தேதி முதல் அடுத்த மாதம் 1ந் தேதி வரை நடைபெறுகிறது. இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி. யின் பல்வேறு கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

    தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும். மேலும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் எஸ்.சி., எஸ்.டி. தொழில் முனைவோருக்கு திட்ட மதிப்பில் 35 சதவீதம் முதலீட்டு மானியம் மற்றும் 6சதவீதம் வட்டி மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50சதவீதம் சலுகை அளிக்கப்படும்.

    இந்த அரிய வாய்ப்பினை மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தங்களது தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பெற்று பயனடையுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×