என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உறவினர் போல நடித்து ஆசிரியர் வீட்டில்  40 பவுன் தங்க நகைகளை திருடிய பெண்
    X

    உறவினர் போல நடித்து ஆசிரியர் வீட்டில் 40 பவுன் தங்க நகைகளை திருடிய பெண்

    • பாப்பாரப்பட்டி அருகே ஆசிரியர் வீட்டில் 40பவுன் நகை கொள்ளையடித்த சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
    • வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கைவரிசை

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே பென்னாகரம் மெயின் ரோட்டில் அப்பு முதலி தெருவை சேர்ந்தவர் சிவசேகர் (வயது 52). இவர் கம்மாளப்பட்டி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி கௌரிசெட்டிபட்டி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.

    இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் ஆசிரியர் சிவசேகரும், அவரது மனைவி ஜெயந்தியும் வேலைக்கு சென்று விட்டனர். சிவசேகரின் தாயார் பெருமா (76). இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது நேற்று மதியம் 2 மணிக்கு ஒரு காரில் இருந்து இறங்கி வந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆசிரியர் சிவசேகர் வீட்டுக்கு வந்துள்ளார். அந்தப் பெண் ஒரு பையில் பழங்களை வாங்கிக் கொண்டு மூதாட்டி பெருமாவிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். அவரது உறவினர் என்று சொல்லி அவருக்கு பழங்களை கொடுத்து விட்டு வெளியே செல்வது போல் சென்று மீண்டும் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

    மூதாட்டி பெருமா ஏமாந்த நேரத்தில் வீட்டில் இருந்த பீரோ சாவி வைத்த இடங்களை நோட்டமிட்டு எடுத்து பீரோவை திறந்து சுமார் 40 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளார்.

    மாலை வீடு திரும்பிய ஆசிரியர் சிவசேகர் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி ஆகியோர் பீரோ திறந்து கிடப்பதையும் பீரோவில் இருந்த நகைகள் திருடப்பட்டதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தாயார் பெருமாவிடம் விசாரித்த போது வீட்டை நோட்டமிட்ட பெண் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து ஆசிரியர் சிவசேகர் பாப்பாரப்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பட்டப் பகலில் மெயின் ரோட்டில் உள்ள வீட்டில் மூதாட்டி கவனத்தை திசை திருப்பி நகை திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×