search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடலில் காயங்கள்-  பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
    X

    கள்ளக்குறிச்சியில் பொது மக்கள் போராட்டம் (கோப்பு படம்)

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடலில் காயங்கள்- பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

    • குற்றவாளிகளை கைது செய்ய கோரி மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல்.
    • மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தாயார் பேட்டி.

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (16), கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் அதிகாலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இறந்த மாணவியின் உடல் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.

    மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்தன என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் இதயம் உள்ளிட்ட 5 உறுப்புகள், தடயவியல் துறை ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் தமது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், கற்பழித்து கொலை செய்யப் பட்டு இருக்கலாம் அல்லது நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் மாணவியின் ஸ்ரீமதியின் தாயார் குற்றம் சாட்டி உள்ளார்.

    தனியார் பள்ளி மாணவி மர்மமான உயிரிழப்புக்கு நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருத்தாசலம் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

    முன்னதாக மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பேரணியாக செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போர் களம் போல் காணப்பட்டது.

    Next Story
    ×