search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்ட மக்களை புறக்கணிக்கும்அரசு விரைவு போக்குவரத்து கழகம்
    X

    தருமபுரி மாவட்ட மக்களை புறக்கணிக்கும்அரசு விரைவு போக்குவரத்து கழகம்

    • தருமபுரியில் இருந்து பெருநகரங்களுக்கு நேரடி பயணம் மேற்கொள்ள வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    • விரைவு போக்குவரத்து கழகம் தருமபுரி மாவட்டத்தை ஒதுக்கி வைக்கிறதா என்ற எண்ணம் தோன்றுகிறது.

    தருமபுரி,

    தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் தமிழக அரசால் இயக்கப்படும் அதி விரைவு பேருந்து சேவை துறையாகும். இது முன்பு திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் என அழைக்கப் பட்டது.

    சென்னையை தலைமை யிடமாகக் கொண்டு இயங்கும் இத்துறையில் 300கிமீ-க்கு அதிகமான தூரமுள்ள வழித்தடங்களில் இத்துறையின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழத்தின் 8 பிரிவுகளில் ஒன்றாகும்.

    இக்கழகத்தின் பேருந்துகள் தமிழகத்தின் முக்கியமான மாவட்டத் தலைநகரங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், சமய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களையும் இணைக்கின்றன.

    அரசு விரைவு பேருந்துகளில் குளிர்சாதனம் இல்லாத பேருந்து, குளிர்சாதன பேருந்து, குளிர்சாதன தூங்கும் வசதியுடன் பயணிக்கும் பேருந்து என ஆறு வகை உள்ளது.

    சென்னையில் இருந்து அனைத்து நகரங்களுக்கும் விரைவு போக்குவரத்து கழகம் தங்களது சேவையை செய்து வருகிறது. மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி வழியாக பெங்களூருக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் இயக்கப்படுகிறது.

    இந்தியாவின் வடக்கு தெற்கு பகுதியை இணைக்கும் NH 7 தேசிய நெடுஞ்சாலையை NH 44 என்று பெயர் மாற்றி விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நான்கு வழி சாலை விரிவாக்கத்தின் போது தருமபுரி நகரப் பகுதிக்குள் வராமல் மூன்று கிலோமீட்டர் சுற்றளவு தூரத்தில் செல்லும் வகையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.

    அதன் பிறகு கன்னியா குமரி, திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பெரும் நகரங்களில் இருந்து வரும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் தருமபுரி நகரத்தை புறக்கணித்து கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு செல்கிறது. அதே மார்க்கத்தில் மீண்டும் கிருஷ்ணகிரி வழியாக தருமபுரி நகரப் பகுதிக்குள் வராமல் தென்னக நகரப் பகுதிகளுக்கு செல்கிறது.

    தருமபுரி நகரில் அமைந்துள்ள பேருந்து நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் பேருந்து நிலையமாக உள்ளது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் பல்லாயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர்.

    தருமபுரியில் இருந்து மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்செந்தூர் ராமநாதபுரம் உள்ளிட்ட நீண்ட தூர நகரங்களுக்கு செல்ல தருமபுரி பஸ் நிலையத்திலிருந்து சேலம் சென்று சேலத்தில் இருந்தும் மதுரை சென்று மதுரையில் இருந்து பேருந்து பிடித்து முக்கிய புண்ணிய ஸ்தலங்களுக்கும், அரசு பணிகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

    பெங்களூரு நகரத்திலிருந்து வரும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் இருக்கைகள் காலியாக இருந்தாலும் பேருந்துகள் நகரப் பகுதிக்குள் வருவதில்லை. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்செந்தூர், மதுரை, திண்டுக்கல், திருவாரூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து தருமபுரி மாவட்டத்தில் அரசு பணிகளிலும் தனியார் நிறுவனங்களிலும் பணிபுரியும் பொதுமக்கள் தருமபுரியில் இருந்து பெருநகரங்களுக்கு நேரடி பயணம் மேற்கொள்ள வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது இந்தியாவின் வடக்கு தெற்கு பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் தருமபுரி மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் வழியாக தான் வட பகுதியில் இருந்து தென் மாவட்டங் களையும் கேரள மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழித்தட மாவட்டமாக தருமபுரி மாவட்டம் அமைந்துள்ளது.

    இந்த மாவட்டத்தில் வியாபார நோக்கமாக வட மாநிலத்தவர்களும் அரசு பணி மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிகமானோர் தென் மாவட்டத்தினரும் பணி செய்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம் விவசாயத்தில் சிறந்த மாவட்டமாக இருந்து வருவதால் தினமும் வியாபாரிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் நெடுந்தூர பயணங்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் தருமபுரி மாவட்டத்தை ஒதுக்கி வருகிறது. ஒருவேளை தருமபுரி மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் என்பதாலோ போக்குவரத்து வசதியிலும் பின் தங்கி இருக்க வேண்டும் என்று நினைத்து விரைவு போக்குவரத்து கழகம் தருமபுரி மாவட்டத்தை ஒதுக்கி வைக்கிறதா என்ற எண்ணம் தோன்றுகிறது.

    மேலும் முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ், ரம்ஜான், பண்டிகை காலங்களில் தொலைத்தூர பயணத்திற்கு நேரடி பயணம் செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள வெளி மாவட்ட மாநில மக்களுக்கு தொலைத்தூர பயணிக்க விரைவு போக்குவரத்து கழக பேருந்து வசதி வேண்டும் என்பதால் தென் மாவட்டங்களில் இருந்து தருமபுரி மாவட்டம் வழியாக பெங்களூர் செல்லும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் தருமபுரி மாவட்ட பயணிகளுக்கு ஆன்லைனில் புக் செய்து தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் வகையில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தூரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×