search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொங்கராயகுறிச்சியில் தொல்லியல்துறை அகழாய்வு மேற்கொள்ளப்படுமா?- கிராம மக்கள் எதிர்பார்ப்பு
    X

    மண்ணுக்குள் பாதி புதைந்துள்ள நிலையில் உள்ள விநாயகர் கோவிலையும், விமானம் மட்டும் வெளியே தெரியும் அம்மன் கோவிலையும் படத்தில் காணலாம்.

    கொங்கராயகுறிச்சியில் தொல்லியல்துறை அகழாய்வு மேற்கொள்ளப்படுமா?- கிராம மக்கள் எதிர்பார்ப்பு

    • கொங்கராயக்குறிச்சியில் முற்கால பாண்டியன் மாறன் சடையனால் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வலம்புரி பிள்ளையார் கோவில் உள்ளது.
    • 1899 முதல் 1905-ம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொண்ட அலெக்சாண்டர் ரியா தனது ஆய்வு அறிக்கையில் இதற்கான சான்றுகளை கூறியுள்ளார்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணிக்கரையில் கொங்கராயக்குறிச்சி அமைந்துள்ளது.

    வலம்புரி பிள்ளையார் கோவில்

    வரலாற்று பெருமை வாய்ந்த இவ்வூரில் முற்கால பாண்டியன் மாறன் சடையனால் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வலம்புரி பிள்ளையார் கோவில் உள்ளது.

    மண்ணில் புதைந்து தற்போது சில வருடங்களுக்கு முன்பு வெளிப்பட்ட வீரபாண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 11-ம் நூற்றாண்டில் ஜடவர்மன் ஸ்ரீ வல்லப பாண்டியனால் கட்டப்பட்டது.

    பைரவர்

    தென் சீர்காழி என்றழைககப்படும் இந்த சிவன் சட்டநாதர் என்றழைக்கப்படும் பைரவர் மிகவும் பழைமையானாவர்.

    இந்த கோவில்கள் இரண்டும் மண்ணுக்குள் புதைந்தே காணப்படுகின்றது. அதிலும் பழைய வெயிலுகந்தம்மன் மற்றும் மாலை அம்மன் கோவில்கள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்து கோவிலின் விமானங்கள் மட்டுமே வெளியே தெரியும்படி காட்சியளிக்கிறது.

    அடிக்கடி வரலாற்று ஆற்று வெள்ளத்தில் அழிந்து போன இந்த ஊரில் தான் 19-ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ பிரசங்கியார் ரேணியஸ் அடிகளார் கிறிஸ்தவ ஆலயம் மற்றும் கிறிஸ்தவ குடியிருப்புகளை உருவாக்கியுள்ளார்.

    தொல்லியல் துறை நடவடிக்கை

    வீரபாண்டீஸ்வரர் கோவிலை போன்று இவ்வூரில் மேலும் பல கோவில்களையும் மண்ணுக்குள் புதைந்துள்ளது. இந்த ஆலயங்களை வெளியே கொண்டு வர தமிழகம் மற்றும் மத்திய தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுகக வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து இந்த ஊரை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் விக்னேஷ் கூறியதாவது:-

    எங்கள் ஊரில் பல கோவில்கள் மண்ணுக்குள் புதைந்து உள்ளது. கொங்கராயக்குறிச்சியின் வரலாறு 9ம் நூற்றாண்டுடன் நிறைவு அடையவில்லை.

    உலக நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் வரலாற்றுடன் இணைந்து முடிவுரை இல்லாத வரலாற்றில் பயணிக்க தொடங்கியுள்ளது.

    அலெக்சாண்டர் ரியா

    இதற்கான சான்றுகளை 1899 முதல் 1905-ம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொண்ட அலெக்சாண்டர் ரியா தனது ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளார்.

    அதன்படி, தாமிரபரணி ஆற்றின் வடகரையில் ஆதிச்சநல்லூருக்கு எதிரே அமைந்துள்ள கொங்கராயக்குறிச்சி கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கல் கட்டுமானம் ஒன்றை கண்டதாகவும், ஆதிச்ச நல்லூர் தாழிக்காட்டில் புதைக்கப்பட்ட மனிதர்களின் வாழ்விடம் கொங்கராயக்குறிச்சியாக தான் இருந்திருக்க வேண்டும் என்றும் அலெக்சாண்டர் இரியா தெரிவித்துள்ளார்.

    இத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட இவ்வூரின் பழம்பெயர் முதுகோனூர் என்பதை மண்ணுக்குள் புதைந்து காணப்படும் வலம்புரி பிள்ளையார் கோவில் 10-ம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகின்றது.

    வாய்மொழி கதைகள்

    இந்த கொங்கராய குறிச்சியில் இருந்த பூர்வகுடி களே ஆதிச்சநல்லூர் தாழிக்காட்டில் புதையுண்டு உள்ளனர் என்பதை உணர்த்தும் விதமாக கொங்கராயக்குறிச்சி மக்களிடம் இன்று வரை வாய்மொழி கதைகள் வழக்கத்தில் உள்ளது.

    மேலும், கொங்க ராயக்குறிச்சி கிராமத்தின் காடு, திரடு போன்ற பல்வேறு பகுதிகளில் பானை ஓடுகள், தாழியின் சிதைந்த பாகங்கள் அதிக அளவில் கிடைக்கின்றன.

    இந்த பானை ஓடுகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதிகளில் கிடைத்த பொருட்களை ஒத்தே காணப்படுகின்றது. இப்படி பல சான்றுகள் ஆதிச்ச நல்லூர் கொங்க ராயக்குறிச்சி வரலாற்று தொடர்பை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது.

    எனவே, ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் புதைந்த முதுமக்களின் வாழ்விடங்களை கண்டறிய வேண்டும் என்றால் கொங்க ராயக்குறிச்சி கிராமத்தில் தொல்லியல்துறை அகழாய்வு மேற்கொள்ள வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது ஆதிச்ச நல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளும் மத்திய தொல்லியல் துறை யினரும், தாமிரபரணி கரையில் உள்ள அகழாய்வு இடங்களை தேடி ஆய்வு செய்யும் மாநில தொல்லியல் துறையினரும் கொங்க ராயகுறிச்சி மீது அதிக ஈடுபாடு கொண்டு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும். இங்குள்ள பழமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×