என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளச்சாராயம் குடித்து தொழிலாளி இறந்ததாக மனைவி புகார்- டி.எஸ்.பி விசாரணை
    X

    கள்ளச்சாராயம் குடித்து தொழிலாளி இறந்ததாக மனைவி புகார்- டி.எஸ்.பி விசாரணை

    • குமரேசன் நேற்று வாந்தி மற்றும் வாயில் நுரை தள்ளியபடி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • போலீசார் குமரேசன் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த ஆசனம்பட்டு பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 46). இவர் கட்டிட கூலி வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி செந்தாமரை(45). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். குமரேசனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    இந்நிலையில் குமரேசன் நேற்று மாலை அதே பகுதியில் வரும்போது கீழே விழுந்து வாந்தி மற்றும் வாயில் நுரை தள்ளியபடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செந்தாமரை வேப்பங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். தனது கணவர் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததாக கண்ணீர் மல்க கூறினார்.

    சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    போலீசார் குமரேசன் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் பழனிமுத்து விசாரணை நடத்தி வருகிறார்.

    எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறோம். குமரேசன் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.

    இதற்கிடையில், டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×