என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி உயிரிழந்த மரநாய்.
கொடைக்கானல் அருகே வாகனம் மோதி அரியவகை மரநாய் பலி
- கொடைக்கானல் மலைப்பகுதியில் யானை, காட்டெருமை, சிறுத்தை, காட்டுபன்றி, முயல், கடமான் மற்றும் அரியவகை உயிரினங்கள் வசித்து வருகின்றன.
- மரநாய் மலைச்சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் யானை, காட்டெருமை, சிறுத்தை, காட்டுபன்றி, முயல், கடமான் மற்றும் அரியவகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. மேலும் இங்கு வானுயர்ந்த மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் நிறைந்து காணப்படுகிறது.
பருவநிலை மாற்றம் காரணமாக அடிக்கடி வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் விலங்குகள் வழி மாறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிடுகின்றன. சில விலங்குகள் மலைச்சாலையில் சுற்றித்திரிவதால் வாகனங்களில் அடிபட்டு பலியாகி வருகின்றன.
கொடைக்கானல் அருகே பெருமாள்மலை ஆனைகிரிசோலை பகுதியில் அரியவகை மரநாய் சுற்றித்திரிந்தது. மலைச்சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தது. இதைபார்த்ததும் அப்பகுதி பொதுமக்கள் மரநாய் உடலை கைப்பற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மலைப்பகுதியில் அரியவகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. இவை இடம்பெயரும்போது விபத்து மற்றும் பல்வேறு காரணங்களால் உயிரிழந்து வருகின்றன. எனவே வனத்துறையினர் வனவிலங்குகள் மற்றும் வனப்பகுதியில் உள்ள மரங்கள், அரியவகை மூலிகை செடிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






