என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிடப்பில் போடப்பட்ட தடுப்பணை திட்டத்தால் வீணாகும் தண்ணீர்
- அரூர் தடுப்பணை திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றின் தண்ணீர் வீணாகிறது.
- 66 ஏரிகளை நிரப்ப கோரிக்கை
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கே. ஈச்சம்பாடியில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப் பட்டுள்ளது. மொத்தம், 17.35 அடி உயர தடுப்பணையின் மூலம், 6,250 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
மழைக்காலங்களில் இங்கிருந்து வெளியேறும் உபரி நீரை, நீரேற்று திட்டம் வாயிலாக மொரப்பூர், நவலை, கம்பைநல்லுார், செங்குட்டை, சின்னா கவுண்டம்பட்டி, கடத்துார் மற்றும் சிந்தல்பாடியிலுள்ள, 66 ஏரிகளை நிரப்ப, விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.
இதையேற்று கடந்த, 2019 ஜூலையில், இது குறித்து ஆய்வு செய்ய ரூ. 10 லட்சம் தமிழக அரசு ஒதுக்கியது. ஆய்வு நடத்தி அரசிடம் திட்ட வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது. தொடர்ந்து இத்திட்டத்துக்கு கடந்த, 2020 பட்ஜெட்டில் ரூ. 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டதால், தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதை வேடிக்கை மட்டும் பார்க்கும் நிலையில் தருமபுரி மாவட்ட மக்கள் உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தென்பெண்ணையாற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையிலிருந்து திறக்கப் பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கே.ஈச்சம்பாடி தடுப்பணை நிரம்பியது. அன்று முதல் இந்த தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் வீணாக தென்பெண்ணையாற்றில் செல்கிறது. கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் தற்போது ஆற்றில் செல்லும் தண்ணீர் மூலம் வறண்டு கிடக்கும், 66 ஏரிகளை நிரப்பி இருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.






