search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்மலை அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்- சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்
    X

    தென்மலை அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் காட்சி.

    தென்மலை அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்- சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்

    • மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கல்லடா ஆற்றின் குறுக்கே தென்மலை அணை உள்ளது.
    • தென்மலை அணையின் அடிவாரத்தில் புகழ்பெற்ற வன சுற்றுச்சூழல் பூங்கா அமைந்துள்ளது.

    செங்கோட்டை:

    தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவு பகுதியில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கல்லடா ஆற்றின் குறுக்கே தென்மலை அணை உள்ளது.

    தென்மலையில் இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் கடந்த 1962-ம் ஆண்டு கொல்லம், திருவனந்தபுரம், ஆலப்புழை, பத்தினம் திட்டா ஆகிய 4 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை கருத்தில் கொண்டு இந்த அணை கட்டப்பட்டது. இது 24 கிலோ மீட்டர் நீளமும், சுமார் 2 கிலோ மீட்டர் அகலமும், 116 மீட்டர் உயரமும் கொண்டது. இந்த அணையின் அடிவாரத்தில் புகழ்பெற்ற வன சுற்றுச்சூழல் பூங்கா அமைந்துள்ளது.

    தென்காசி மாவட்டத்திற்கு மிக அருகாமையில் இருப்பதால் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இந்த பூங்காவை வந்து பார்த்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் தென்மலை அணையையும் பார்வையிட்டு செல்வது வழக்கம். கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அணை முழு கொள்ளளவான 116 மீட்டரை 2 முறை எட்டியது. இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைக்கு அதிகளவு நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது அணையின் கொள்ளளவு 113 மீட்டராக உயர்ந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி நிமிடத்திற்கு 115.8 மீட்டர் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்த அணையில்ருந்து 7.5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் 2 யூனிட்டுகள் மூலம் மின் உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது. தென்மலை அணை இந்த ஆண்டு குறிப்பிட்ட நேரத்தில் நிரம்ப உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர். இதற்கிடையே அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் வெளியேற்ற திட்டமிடப்பட்டு வெளி யேற்றப்படுகிறது. அதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

    Next Story
    ×