என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பதிவேட்டில் உள்ளபடி கண்மாய் கலுங்கை சீரமைத்த அதிகாரிகள்
- நரிக்குடி அருகே அரசு பதிவேட்டில் உள்ளபடி கண்மாய் கலுங்கை அதிகாரிகள் சீரமைத்தனர்.
- மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகே மறையூர் கிழக்கு பகுதியில் உள்ள கண்மாயில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான கலுங்கு பகுதி உள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகிறது.இந்த நிலையில் மறையூர் கலுங்கு பகுதியிலிருந்து கண்மாய் நீரை பகிர்ந்து கொள்வதில் மறையூர், சேதுராயனேந்தல் என இரு கிராமங்கள் இடையே பிரச்சனை இருந்து வருகிறது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், சமாதான கூட்டங்கள் நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. இந்த நிலையில் சேதுராயனேந்தல் கிராம மக்கள் கடந்த 2021-ம் ஆண்டில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த விவகாரத்தில் நிபுணர்கள் குழுவை அமைத்து கலுங்கு பகுதியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி அதிகாரிகள் மதுரை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையை பரிசீலனை செய்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் மறையூர் கலுங்கு பகுதியிலுள்ள உபரி நீர் செல்லும் பகுதி உயர்த்தி கட்டப்பட்டு இருப்பதாகவும், பொதுப்பணித்துறை பராமரித்து வரும் பழைய பதிவேடுகளில் உள்ளது போன்று சீரமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
அதன்படி காரியாபட்டி குண்டாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி பொறியாளர்கள் அழகுசுந்தரம், சிவகணேஷ் ஆகியோர் அடங்கிய நீர்வளத்துறை அதிகாரிகள் மறையூர் கலுங்கு பகுதியை பொதுப்பணித்துறை பதிவேடுகளில் உள்ளது போன்று சீரமைத்தனர். அப்போது திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






