search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருதுநகரில் கட்டப்பட்ட புதிய பாலத்தை இடிக்க வந்த அதிகாரிகள்
    X

    விருதுநகரில் கட்டப்பட்ட புதிய பாலத்தை இடிக்க வந்த அதிகாரிகள்

    • விருதுநகரில் கட்டப்பட்ட புதிய பாலத்தை இடிக்க வந்த அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
    • கச்சேரி ரோட்டில் இருந்து விக்னேஷ் காலனிக்கு செல்லும் வழியில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சியில் அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு கச்சேரி ரோட்டில் இருந்து விக்னேஷ் காலனிக்கு செல்லும் வழியில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆஷா முயற்சியின் பேரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் மற்றும் நகராட்சி பங்களிப்பு மூலம் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்ட ஒப்புதல் பெறப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பாலம் கட்டும் பணி நகராட்சி என்ஜினீயர்களின் வழிகாட்டுதலின்படி நடந்ததாக தெரிகிறது. அப்போது 2 முறை என்ஜினீயர்கள் பாலம் வடிவமைப்பில் திருத்தம் செய்தனர். அதனையும் ஏற்றுக்கொண்டு பாலம் கட்டப்பட்டது. பாலம் பணிகள் முழுமையாக முடிவடைந்த பின் தற்போது பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட பாலம் நகராட்சி என்ஜினீயர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாக கூறி அதனை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து இன்று காலை ஜே.சி.பி. எந்திரத்துடன் நகராட்சி அலுவலர்கள் பாலத்தை இடிக்க வந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வார்டு கவுன்சிலர் ஆஷா மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து பாலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கவுன்சிலருக்கும் நகராட்சி அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    தொடர்ந்து பொது–மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பாலம் இடிக்கும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டு அலுவ–லர்கள் பாதியிலேயே திரும்பச் சென்றனர். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பாலத்தை நகராட்சி இடிக்க முயற்சி மேற்கொண்டது பொது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து தி.மு.க. கவுன்சிலர் ஆஷா கூறுகையில், விருதுநகர் நகராட்சி ஒப்புதலின்படி பணியானை பெறப்பட்டு பாலம் கட்டுவதற்கு ஆய்வு பணிகள் நடந்தது. அதனை தொடர்ந்து பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டு 2 முறை திருத்தம் செய்ய வேண்டும் என கூறினர். அதனை ஏற்று திருத்தமும் செய்யப்பட்டது. ஆனால் தற்போது அதிகாரிகள் பல வடிவமைப்பு சரியில்லை என்று கூறி இடிக்க நடவடிக்கை மேற்கொள்வது ஏற்க முடியாது. பாலத்தை இடிக்க நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம் என்றார்.

    Next Story
    ×