என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக தொழிலாளியிடம் ரூ.3 லட்சம் மோசடி
- கோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக தொழிலாளியிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- இதுகுறித்து ரவிக்குமார் சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது37). கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கொத்தன்குளத்தை சேர்ந்த சுப்பிரமணி(40) என்பவர் அறிமுகமாகி உள்ளார். அதன்பின்னர் இருவரும் நண்பர்களாக இருந்து ள்ளனர். இந்தநிலையில் தென்காசி கோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக ரவிக்குமாரிடம் சுப்பிரமணி கூறியுள்ளார். அதற்கு ரூ.3 லட்சம் தேவைப்படும் என்றும் கூறியுள்ளார். அதனை நம்பிய ரவிக்குமார் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தென்காசி கோர்ட்டில் சுப்பிரமணியிடம் ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் கொடுத்துள்ளார்.
மீண்டும் ஒரு மாதம் கழித்து சேத்தூர் பஸ் நிலையத்தில் வைத்து ரூ.1 ½ லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி ரவிக்குமாருக்கு, கோர்ட்டில் சுப்பிரமணி வேலை வாங்கித்தரவில்லை. இதனால் அவரிடம் ரவிக்குமார், தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள் ளார்.
ஆனால் சுப்பிரமணி பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். சம்பவத்தன்று சேத்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். ஒன்றின் அருகில் அவர் நின்று கொண்டிருந்தார். அதைப்பார்த்த ரவிக்குமார் அவரிடம் சென்று தனக்கு தரவேண்டிய பணத்தை தருமாறு கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி, ரவிக்குமாரை கீழே தள்ளி உதைத்தார். மேலும் பணத்தை திரும்ப கேட்கக்கூடாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்று விட்டார்.
இதுகுறித்து ரவிக்குமார் சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொடுத்த பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி கொலைமிரட்டல் விடுத்த சுப்பிரமணியை தேடி வருகின்றனர்.






