என் மலர்
உள்ளூர் செய்திகள்

தங்கள் நிலத்துக்கான ஆவணங்களை வட்டார வளர்ச்சி அதிகாரி விஜயசந்திரிகாவிடம் பொதுமக்கள் வழங்கினர்.
கொடைக்கானலில் சாலை அமைக்கும் பணிக்காக சொந்த நிலத்தை வழங்கிய கிராம மக்கள்
- வெள்ளகவி கிராமத்திற்கு சாலை வசதி வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்
- இதனைத் தொடர்ந்து தங்களது பட்டா நிலங்களை ஊராட்சி ஒன்றியத்திற்கு தானமாக பொதுமக்கள் வழங்கினர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் வெள்ளகவி கிராமத்திற்கு சாலை வசதி வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் பிரிவின் கீழ் கிராம பொது மக்களால் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் உத்தரவின்படி வருவாய் துறைக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது.
மேலும் புதிதாக சாலை அமைக்கும் பணி கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்டது. வட்டக்கானல் முதல் வெள்ளகவி வரை உள்ள பாதையின் மொத்த அளவு 7 கி.மீ தூரமாகும். இதில் சாலையில் 5 கி.மீ வரை சாலை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 2 கி.மீ பகுதி தனி நபர் வசிக்கும் பகுதியாக இருந்தது. எனவே அந்த நிலத்தை பெறும் முயற்சியில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இறங்கியது.
பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தங்களது பட்டா நிலங்களை ஊராட்சி ஒன்றியத்திற்கு தானமாக வழங்க பொதுமக்கள் முடிவு செய்தனர். இந்த பத்திரத்தின் ஆவணங்களை நில உரிமையாளர்கள் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா விடம் ஒப்படைத்தனர்.
இதன் காரணமாக மீதம் உள்ள சாலைப்பணிகள் விரைவில் முடிவடைவ தோடு தார் சாலை அமைக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






