என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாளை அருகே வியாபாரியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
- பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு அப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் என்பவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
- அதிர்ச்சியடைந்த தங்கபாண்டி நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாளை அருகே உள்ள பாளையஞ்செட்டிவிளை பகுதியை சேர்ந்தவர் தங்க பாண்டி(வயது 40).
இவர் அப்பகுதியில் பானிபூரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் அப்பகுதியில் வாங்கிய 5 சென்ட் நிலத்திற்குரிய பட்டா பெயர் மாறுதல் செய்து தரகேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு அப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் என்பவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தங்கபாண்டி முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் கொடுத்துள்ளார். மீதி ரூ.8 ஆயிரத்தையும் தந்தால் தான் பட்டா பெயர் மாற்றம் செய்வேன் என சுப்பிரமணியன் கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த தங்கபாண்டி இதுகுறித்து நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியனைகையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை தங்கபாண்டியிடம் கொடுத்து அனுப்பினர். அவர் அந்த ரூபாய் நோட்டுகளுடன் இன்று பாளையஞ்செட்டிகுளத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று சுப்பிரமணியனிடம் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியனைகையும், களவுமாக மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






