search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐ.ஏ.எஸ். அதிகாரி வீடு உள்பட 10 இடங்களில் சோதனை- லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
    X

    ஐ.ஏ.எஸ். அதிகாரி வீடு உள்பட 10 இடங்களில் சோதனை- லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

    • சென்னையில் 5 இடங்களிலும் வெளி மாவட்டங்களில் 5 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
    • ரசீது புத்தகங்களை அச்சிட்டதில் ஏற்பட்டுள்ள முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர்.

    சென்னை:

    சென்னை அறிவியல் நகரத்தின் துணை தலைவராக இருப்பவர் மலர்விழி. ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரியான இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    இந்த குடியிருப்பில் 13-வது மாடியில் மலர்விழியின் வீடு உள்ளது. இவரது வீட்டுக்கு இன்று காலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சென்றனர். அவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழியிடம் தங்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக வீட்டில் சோதனை நடத்தி சில தகவல்களை திரட்ட வேண்டியுள்ளது என்று கூறினர்.

    இதையடுத்து வீட்டுக்குள் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    தர்மபுரி மாவட்ட கலெக்டராக மலர்விழி கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி பணியில் சேர்ந்து 2020-ம் ஆண்டு அக்டோபர் 29-ந் தேதி வரை பணி புரிந்துள்ளார்.

    தனது பணி காலத்தில் மலர்விழி ஐ.ஏ.எஸ். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரி வசூல் செய்வதற்கு சொத்து வரி ரசீது புத்தகம், குடிநீர் கட்டண ரசீது புத்தகம், தொழில் வரி ரசீது புத்தகம் உள்ளிட்ட புத்தகங்களை அச்சிட்டு வாங்கி உள்ளார். இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் மலர்விழி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    2-வது குற்றவாளியாக சென்னை சுப்பாராவ் நகரை சேர்ந்த கிரசண்ட் நிறுவன உரிமையாளரான தாகீர் உசேன், பத்மாவதி நகரை சேர்ந்த நாகா டிரேடர்ஸ் உரிமையாளரான வீரய்யா பழனிவேலு ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனங்களை நடத்தி வரும் இவர்கள் இருவரும் வரி வசூல் புத்தகங்களை அச்சிட்டு கொடுப்பதில் ஏற்பட்டுள்ள முறைகேட்டுக்கு துணை புரிந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    தர்மபுரி மாவட்டம் முழுவதும் 251 ஊராட்சிகளுக்கு ரசீது புத்தகங்களை அச்சிட்டு வினியோகம் செய்ததில்தான் ரூ.1½ கோடி வசூலித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இந்த ரசீது புத்தகங்களை அச்சிடுவதற்கு மலர்விழி ஐ.ஏ.எஸ் ரூ.1 கோடியே 31 லட்சத்து 77,500 கூடுதலாக கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதன் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.

    வரி வசூல் ரசீது புத்தகங்களை அச்சிட்டு வாங்குவதில் அரசு வகுத்துள்ள விதிகளை மீறி அரசின் நிதியை மோசடி செய்யும் எண்ணத்துடன் குற்றவியல் சதியில் கலெக்டராக இருந்த மலர்விழி ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்களது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்து உள்ளனர். ஒப்பந்த புள்ளி கோரப்படாமல் 2 தனியார் நிறுவனங்களில் இருந்தும் அதிக விலைக்கு புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.

    இப்படி நேர்மையற்ற முறையில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 500 வீட்டு வரி ரசீது புத்தகங்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 மற்றும் 3-வது குற்றவாளிகளான தனி நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொகை தர்மபுரி மாவட்ட அச்சு பொறிகளின் விலையுடன் ஒப்பிடும்போது முற்றிலும் அதிகமாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மலர்விழி ஐ.ஏ.எஸ். உள்பட 3 பேர் மீதும் 120பி (கூட்டு சதி) மற்றும் ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழியின் வீடு உள்பட சென்னையில் 5 இடங்களிலும் வெளி மாவட்டங்களில் 5 இடங்களிலும் என மொத்தம் 10 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனையில் ஈடுபட்டனர். விழுப்புரம், தர்மபுரியில் தலா ஒரு இடத்திலும் புதுக்கோட்டையில் 3 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குடி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். தொழிலதிபரான இவர் அ.தி.மு.க.வில் உள்ளார். அரசு ஒப்பந்ததாரரான இவர் ஏராளமான பணிகளை எடுத்து நடத்தி வருகிறார்.

    இவரது சகோதரர் முருகானந்தம். பா.ஜ.க.வில் இருக்கும் இவர் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளராக பணியாற்றி வருகிறார்.

    சகோதரர்கள் இருவரும் சேர்ந்து நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக தொழில் செய்து வருகின்றனர்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்த இவர்கள் மீது அதிக சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தன.

    இந்த நிலையில் பழனிவேலுக்கு சொந்தமான கருக்காக்குடியில் உள்ள இரண்டு வீடுகள், புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கருவூல காலனி பகுதியில் வசித்து வருகிறார்.

    இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், ஏரியூர், தருமபுரி, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணி புரிந்து வந்தார். தற்போது அவர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    கிருஷ்ணன் கடந்த 2019-ம் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியபோது அரசின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக கொரோனா காலங்களில் பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

    இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர், இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர், தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கருவூல காலனியில், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணனின் வீட்டில் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அரசின் திட்டங்கள் செயல்படுத்துவதற்காக வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் டெண்டர் விடப்பட்ட விழுப்புரம் மாவட்டம் சாலமேடு அசனகுளம் பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீநடியம்பாள் ஏஜென்சி நிறுவனத்திற்கும், சென்னை பத்மாவதி நகரைச் சேர்ந்த வீரய்யா பழனிவேலுக்கு சொந்தமான நாக டிரேடர்ஸ் நிறுவனத்திற்கும், சுப்பாராவ் நகரைச் சேர்ந்த தாகீர்உசேன் என்பவருக்கு சொந்தமான கிரசண்ட் டிரேடர்ஸ் நிறுவனத்திற்கும், காஞ்சிபுரம் மடிப்பாக்கம் பகுதியில் உள்ள வன ரோஜா என்பவருக்கும் சொந்தமான ஆர்.வி.என் என்ற நிறுவனத்திற்கும் இந்த முறைகேடுகளில் தொடர்பு உள்ளது என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரியவந்தது.

    அந்த 4 நிறுவனங்களிலும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்தந்த நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ரசீது புத்தகங்களை அச்சிட்டதில் ஏற்பட்டுள்ள முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். 2-வது எப்.ஐ. ஆரில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வட்டார வளர்ச்சி அதிகாரி கிருஷ்ணன், விழுப்புரத்தை சேர்ந்த பாப்பாத்தி, சென்னையை சேர்ந்த வீரய்யா பழனிவேலு, தாகீர் உசேன், காஞ்சிபுரத்தை சேர்ந்த வனராஜா ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்களுக்கு சொந்தமான இடங்களிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அ.தி.மு.க. ஆட்சியின்போது மாவட்ட கலெக்டராக இருந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது முறைகேடு புகார் கூறப்பட்டு இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாார் வழக்குப்பதிவு செய்திருப்பதும் அவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×