search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடிந்தால் தீபாவளி கொண்டாட்டம்:  தருமபுரி நகரில் களை கட்டிய பொருட்கள் விற்பனை   -அலை மோதிய மக்கள் கூட்டம்
    X

    தருமபுரி நகரில் தீபாவளி பொருட்கள் வாங்க திரண்டுள்ள மக்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

    விடிந்தால் தீபாவளி கொண்டாட்டம்: தருமபுரி நகரில் களை கட்டிய பொருட்கள் விற்பனை -அலை மோதிய மக்கள் கூட்டம்

    • இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமையில் 90 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • புத்தாடை, பட்டாசு மற்றும் இனிப்பு- காரம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

    தருமபுரி,

    தித்திக்கும் தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை நாளில் பொதுமக்கள் புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடுவார்கள். மேலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். மற்ற பண்டிகைகளை காட்டிலும் தீபாவளி பண்டிகை என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

    இந்த தீபாவளி பண்டிகையொட்டி தருமபுரி மாவட்டம் முழுவதும் புத்தாடை, பட்டாசு மற்றும் இனிப்பு- காரம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. தருமபுரி நகரில் உள்ள முக்கிய சாலைகளான சின்னசாமி நாயுடு தெரு, ஆறுமுக ஆசாரி தெரு, நாச்சியப்ப கவுண்டர் தெரு, பென்னாகரம் ரோடு மற்றும் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்கு நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நகரில் உள்ள பெரும்பாலான கடைகளில் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக சென்று புத்தாடைகளை வாங்கி மகிழ்ந்தனர்.

    மேலும் பட்டாசு கடைகள், இனிப்பு கடைகள் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.இதனால் இந்த சாலைகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தருமபுரி நகரின் முக்கிய சாலைகளான சின்னசாமி நாயுடு தெரு, ஆறுமுக ஆசாரி தெரு மற்றும் நாச்சியப்ப கவுண்டர் தெரு உள்ளிட்ட சாலைகளில் போலீசார் இருசக்கர வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்திருந்தனர். இங்கு ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. மேலும் பி.ஆர். சீனிவாசராவ் தெரு, நகராட்சி சாலை, பிஆர். சுந்தரம் ஐயர் தெரு லிட்டர் சாலைகளில் நூற்றுக்கணக்கான கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாகவும் இந்த சாலைகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தினர். டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமையில் 90 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சின்னசாமி ஆகியோரது மேற்பார்வையில் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று( ஞாயிற்றுக்கிழமை) தருமபுரி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். தீபாவளி பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் தங்களது கார்களை நகரின் எல்லைப் பகுதிகளில் நிறுத்திவிட்டு வருமாறும், இருசக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட கடையின் போது முன்பு நிறுத்தாமல் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்தி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×