என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் கத்தியுடன் மனு அளிக்க வந்த தொழிலாளி
- துக்கம் தாளாமல் மருமகளும் தற்கொலை செய்து கொண்டார்
- புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம்
வேலூர்:
வேலூர் எஸ்பி அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் இன்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
அப்போது காட்பாடி ஏரி முனை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சக்கரபாணி அவரது மனைவி கோவிந்தம்மாள் தனது பேரன்களுடன் வந்து மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களது மூத்த மகன் ரஞ்சித் குமார் கடந்த மே மாதம் 14-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் ஏரியில் மூழ்கி இறந்து விட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
எனது மகன் அவரது நண்பர் ஒருவருடன் அன்று இரவு செல்போனில் திட்டியபடி பேசிக் கொண்டு இருந்தனர். அவர் இறந்த துக்கம் தாளாமல் மருமகளும் தற்கொலை செய்து கொண்டார் இதனால் அவரது இரண்டு மகன்கள் பெற்றோர் இன்றி தவித்து வருகின்றனர்.
எனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக காட்பாடி போலீசில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது மகனின் சாவு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.
காட்பாடி அடுத்த குப்பிரெட்டி தாங்கள் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் இவர் தெரு ஓரத்தில் ஆடு மாடுகளை கட்டி பராமரித்து வந்தார்.
இவர் கையில் கத்தியுடன் மனு கொடுக்க வந்தார்.அவர் கூறியதாவது:-
எனது மகன் மணிகண்டன் ஆடு மாடுகளை பராமரிக்கும் போது பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் ஒருவர் இங்கு ஆடு மாடுகளை கட்டக் கூடாது என தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியால் மகனின் காலில் வெட்டினார்.
இதுகுறித்து மேல்பாடி போலீசில் புகார் செய்தேன் அவர்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவே எனது மகனை வெட்டிய கத்தியுடன் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார்.
இதனால் எஸ்பி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.






