என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் புதிய பஸ் நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்
- பஸ்கள் இயக்கப்படும் இடங்களை அடிக்கடி மாற்றுவதால் பயணிகள் கடும் அவதி
- திருப்பதி பஸ்களை புதிய பஸ்நிலையத்தில் இருந்து இயங்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் திறந்து வைத்தார்.
ஆனாலும் இறுதி கட்டப்பணிகள் முடிவடையாததால் அங்கிருந்து இன்னும் பஸ்கள் இயக்கப்படவில்லை.
சென்னை செல்லும் பஸ்கள் மட்டும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.
மற்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் வேலூர் பழைய பஸ் நிலையம் மற்றும் மக்கான் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. மக்கான் பஸ் நிலையத்தில் இருந்து சித்தூர் திருப்பதி மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் திருவண்ணாமலை திருச்சி ஆரணி விழுப்புரம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்தன. திடீரென இந்த பஸ்கள் அனைத்தும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட சித்தூர், திருப்பதி மற்றும் திருவண்ணாமலை, திருச்சி, ஆரணி, விழுப்புரம் பஸ்கள் அனைத்தும் நாளை முதல் மக்கான் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒரு முறை பஸ் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டபோது பயணிகள் மக்கான் பஸ் நிலையத்திற்கு சென்று ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் அதே பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது.இதனால் தற்போது பழைய பஸ் நிலையத்தில் இருந்து சித்தூர் திருப்பதி செல்லும் பயணிகள் மக்கான் தற்காலிக பஸ்நிலையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாறி மாறி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதால் பயணிகளுக்கு குழப்பம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
திருவண்ணாமலை திருச்சி ஆரணி விழுப்புரம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் பழைய பஸ் நிலையத்தின் வழியாகவே செல்லும்.இதனால் அந்த பகுதிகளுக்கு செல்லும் பொது மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் சித்தூர் திருப்பதி செல்லும் பயணிகள் அவதி அடைய நேரிடும். தென் மாவட்டங்களில் இருந்து திருப்பதிக்கு வரும் பக்தர்கள் வேலூர் வழியாகவே சென்று வருகிறார்கள்.அவர்களுக்கு இந்த போக்குவரத்து மற்றும் தெரியாததால் அலைக்கழிப்பு ஏற்படும்.
எனவே திருப்பதி சித்தூர் செல்லும் பஸ்களை தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தின் ஒரு பகுதியிலிருந்து இயக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை செல்லும் பஸ்கள் இயக்கப்படுவது போல திருப்பதி சித்தூர் பஸ்களை மட்டுமாவது தற்போது புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.






