என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடு விடும் விழாவில் கால் முறிந்தும் முதல் பரிசு வென்ற காளை
    X

    காளைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காட்சி.

    மாடு விடும் விழாவில் கால் முறிந்தும் முதல் பரிசு வென்ற காளை

    • வேலூரில் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்
    • விழா நடக்கும் பகுதிகளில் கிணறுகளை மூட உத்தரவு

    வேலூர்:

    எருதுவிடும் திருவிழாவில் கால் முறிவு ஏற்பட்ட மாட்டுக்கு 4 வகையான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    வாணியம்பாடி வெள்ளகுட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாபு. விவசாயி. இவர் காளை மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த மாடு எருது விடும் திருவிழாவுக்காக தயார் படுத்தி வந்தார்.

    பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு முதல்பரிசை வென்றுள்ளது. எனவே அந்த காளைக்கு வெள்ளகுட்டை பைபாஸ் என்று பெயரிட்டு அழைத்து வந்தனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் பெத்தூர் என்ற பகுதியில் சமீபத்தில் நடந்த எருதுவிடும் திருவிழாவில் கலந்து கொண்டு இலக்கை நோக்கி ஓடியது. அதில் முதல்பரிசை வென்றது. ஆனால் மாடு ஓடியபோது திடீரென காளையின் கால் முறிந்து எலும்பு இரண்டு துண்டாகியது.

    படுகாயமடைந்து உயிருக்கு போராடிய காளையை வேலூர் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.

    மாட்டினை பரிசோதனை செய்த டாக்டர்கள் அறுவை சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.

    அதன்படி டாக்டர் நாசர் தலைமையில் டாக்டர் ரவிசங்கர் மற்றும் குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

    காளையின் காலில் இரும்பு ராடு மற்றும் பிளேட் ஆகியவை அறுவை சிகிச்சைகள் மூலம் பொருத்தப்பட்டது. மேலும் கால் நரம்பு சிதைவு ஏற்பட்டிருந்ததால் அதற்கும் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

    4 வகையான அறுவை சிகிச்சை

    இதுதவிர, கால் பகுதியில் சதைகள் முற்றிலுமாக சிதைந்திருந்ததால் தொடையில் இருந்து சதைகள் எடுத்து காலில் பொருத்தி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இந்த காளைக்கு மேற்கொள்ளப்பட்ட 4 வகை அறுவை சிகிச்சையும் முதன் முதலாக புதிய முயற்சியாக மேற்கொள்ளப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    கிணறுகளை மூட உத்தரவு

    வேலூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழா வருகிற 16-ந் தேதி தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

    78 இடங்களில் விழாக்கள் நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில் முதல்கட்டமாக 43 கிராமத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    விழாவை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் மேற்கொண்டு வருகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று விழாக்குழுவினருக்கு அறிவுறுத்தி வருகின்றனர். அதேவேளையில் விழா நடத்தும் விழாக்குழுவினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு விழா நடத்துவதில் விழாக்குழுவினர் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    கடந்த ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற எருது விடும் திருவிழாக்களில் ஓடிய காளைகள் பல கிலோ மீட்டர் சீறியபடி ஓடின.

    இதனால் பல்வேறு இடங்களில் வாகனங்கள் மீது மோதுவது, கீழே விழுந்து மாடுகள் காயமடைவது, கிணற்றுக்குள் மாடுகள் தவறி உள்ளே விழுவது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. கிணற்றுக்குள் விழுந்த மாடுகளை மீட்பது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தின. எனவே இந்தாண்டு புதிதாக விழா நடைபெறும் பகுதியில் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உள்ள கிணறுகள் மூடி பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விழாவில் துள்ளிவரும் காளைகள் எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் விழுவதை தடுக்கவும், மதுபோதையில் இளைஞர்கள் கிணற்றுக்குள் விழுவதை தடுக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திறந்த வெளி கிணறுகளை கம்புகள் அல்லது இரும்பு கம்பிகள் கொண்டு தற்காலிகமாக மூடி வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.

    Next Story
    ×