என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் காட்பாடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட காட்சி.
வேலூரில் வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல்
- வாகன ஓட்டிகள் கடும் அவதி
- திட்டமிட்டு மாற்றம் செய்யவில்லை
வேலூர்:
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த மாற்றம் நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று காலை முதலே நேஷனல் தியேட்டர் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் பஸ்கள் நேஷனல் தியேட்டர் பகுதியில் இருந்து சர்வீஸ் சாலைக்கு திருப்பி விடப்பட்டு தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டன.
இதனால் காட்பாடி சாலையில் பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.காலை முதல் ஏராளமான வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து சென்றது. மக்கான் பகுதியில் இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் பாதைக்கு சுமார் 5 நிமிடத்தில் செல்லலாம். ஆனால் இந்த போக்குவரத்து மாற்றத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
காட்பாடி சாலையின் ஓரம் ஏராளமான வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டு உள்ளன.அந்த வாகனங்களை அகற்றி முறையாக போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ள ப்பட்டிருந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்காது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பின்னரே அதிக அளவிலான போக்குவரத்து நெரிசலும் பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. அதிகாரிகள் முறையாக திட்டமிட்டு போக்குவரத்தையும் மாற்றி உள்ளார்களா? என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை காட்பாடி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வழி வகுத்தது.
இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் விழி பிதுங்கினர். இனியாவது போலீசார் முறையாக வாகனங்கள் செல்ல போக்குவரத்தை சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






