என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதல் இடம் பெற்ற திருவனந்தபுரம் அணிக்கு கோப்பை வழங்கப்பட்ட காட்சி.
இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் திருவனந்தபுரம் அணி முதலிடம்
- ரூ. 1.30 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது
- 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த நத்தம் பகுதியில் உள்ள சாய் பிரண்ட்ஸ் கிளப் உள் விளையாட்டு அரங்கில் சிங்கப்பூர் சரவணன் பேட்மிண்டன் அகடமி சார்பில் அகில இந்திய அளவிலான இரட்டையர்கள் பேட்மிண்டன் போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் தென்னிந்தியாவைச் சேர்ந்த தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் வட இந்திய மாநிலங்களை சேர்ந்த 158 சிறந்த பேட்மிண்டன் அணிகள் கலந்து கொண்டன.
இந்த போட்டிகள் தொடக்க விழாவில் தாழையாத்தம் ஊராட்சி மன்ற தலைவர் அமுலுஅமர், தொழிலதிபர் சி.கே.முனாஸ், வழக்கறிஞர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டிகளில் 300-க்கும் மேற்பட்ட பேட்மிட்டன் வீரர்கள் கலந்து கொண்டு இரண்டு நாட்கள் விறுவிறுப்பாக விளையாடினார்கள்.
இறுதிப் போட்டியில் இரட்டையர்கள் பிரிவில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரச் சேர்ந்த வினய் மற்றும் அரி இணை முதல் பரிசாக 40,000 ரூபாயையும் கோப்பையையும் வென்றது, இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய கர்நாடக மாநிலம் ஷிமோகா நகரைச் சேர்ந்த பிரசாந்த் மற்றும் கவுதம் இணை 20 ஆயிரம் ரூபாயும் கோப்பையும் வென்றது.
இதில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டிகள் மற்றும் 40 வயதிற்கான மற்றும் அனைத்து வயதினரும் கலந்து விளையாடிய இரட்டையர் இறகு பந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அகடமி தலைவர் எஸ்.சரவணன் விழா குழுவினர் சி.முரளி ஜெ.உதயராஜ், எஸ்.செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.






