என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடு விடும் விழா நடத்த கடும் கட்டுப்பாடுகள்
    X

    மாடு விடும் விழா நடத்த கடும் கட்டுப்பாடுகள்

    • ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே அனுமதி
    • 2 மணிக்குள் முடிக்க வேண்டும்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா நடத்துவது தொடர்பாக அனுமதிகோரும் விண்ணப்பங்களை https://forms.gle/GDWNspXeNc1DfW4r8 என்ற ஆன்லைன் முகவரி மூலம் அவசியம் பதிவு செய்யப்பட வேண்டும்.

    விழா நடத்த அனுமதி கோரும் விண்ணப்பங்கள் நாளை 06.01.2023 மாலை 5 மணி வரை மட்டுமே ஆன்லைன் முறையில் பெறப்படும். இணைய தளத்தில் பதிவு செய்யப்படாத எந்த ஒரு விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    அனுமதிக்கப்படும் இடத்தில் மட்டுமே மாடுவிடும் விழா நடத்தப்பட வேண்டும். 09.01.2023 அன்று இறுதி முடிவு எடுக்கப்பட்டு விழா நாள் மற்றும் இடம் குறித்து இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்.

    சம்மந்தப்பட்ட விழாக்குழுவினர் விழா நாளுக்கு 15 நாட்கள் முன்னதாக விண்ணப்பப்படிவம், காப்பீடு செய்யப்பட்டதற்கான ஆவணம், ரூ.10,000-க்கான வரைவோலை, பிரமாண பத்திரம் ஆகியவற்றுடன் கலெக்டருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    மேற்படி விண்ணப்பத்துடன் விழாவில் பங்கேற்கும் அதிகபட்ச காளைகளின் எண்ணிக்கை மற்றும் காளைகளின் பட்டியல் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    விழா நடைபெறும் இடம் திறந்தவெளி மைதானமாகவும். குடியிருப்புகளுக்கு தொலைதூரத்தில் உள்ளதாக அமைந்துள்ள திடலினை தேர்வு செய்து அந்த திடலின் வரைபடத்தை கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநரிடம் அங்கீகாரம் பெற வேண்டும்.

    ஓடு தளம் முடியுமிடத்திலும் 8 அடி உயரத்தில் வாயில் அமைக்கப்பட வேண்டும்.

    இந்திய விலங்குகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு பேனர்கள் வைக்கப்பட வேண்டும். காளைகளுக்கு தேவையான அளவு தங்குமிடம், தண்ணீர் வசதி மற்றும் தீவண வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

    ஒவ்வொரு காளைகளுடனும் அந்த காளையின் பாதுகாப்பு கருதி அதன் உரிமையாளர் அருகிலேயே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு காளையும் கால்நடை துறை மருத்துவர்களால் உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு மட்டுமே அனுமதிக்கப்படும்.

    செயல்திறனை அதிகரிக்கும் மற்றும் எரிச்சலூட்டும் மருந்துகள் செலுத்தப்பட்ட காளை களுக்கு அனுமதியில்லை. விழாவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் அரசு அலுவலர்களுக்கு உரிய முறையில் உணவு,

    குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். விழா தளத்தில் ஒலிபெருக்கிகள் முறையாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

    வாடிவாசல், விழா அரங்கம் ஆகியவற்றை முழுமையாக கண்காணிக்க கேமராவோ அல்லது வெப் கேமரா வசதி ஏற்படுத்த வேண்டும்.

    ஒவ்வொரு காளையும் ஒரு சுற்று மட்டுமே ஓட அனுமதிக்கப்படும். விழாவினை காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே நடத்த அனுமதிக்கப்படும்.

    இது தவிர மாவட்ட நிர்வாகம் நிலைமைகளுக்கேற்ப பிறப்பிக்கும் உத்தரவுகளை கடைபிடித்து விழா நடத்த தெரிவிக்கப்படுகிறது.

    உரிமையாளர்கள் காளைகளுக்கு போதிய ஓய்வு அளித்தும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டும். விழாவிற்கு அழைத்து வரவேண்டும்.

    விழா முடிந்தும் காளைகளுக்கு கட்டாயமாக போதிய ஓய்வு அளித்தும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டும் செல்லவேண்டும்.

    ஓடு பாதையின் இறுதியில் காளைகளை பாதுகாப்பாக பிடித்து அழைத்துச் செல்ல வேண்டும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×