என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெறி நாய் இறந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்த வெறி நாய் சாவு
- 30 பேரை கடித்தது
- மாநகராட்சி சார்பில் நாய்களை பிடிக்கும் பணி நடந்தது
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவிலுக்கு கடந்த 23- ந் தேதி ஏராளமானவர்கள் வந்திருந்தனர். மேலும் அங்கு பஸ் நிறுத்ததிலும் பொதுமக்கள் பலர் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த வெள்ளை நிற தெருநாய் ஒன்று திடீரென அங்கிருந்த பொதுமக்களை கடிக்க தொடங்கியது.
ஒருவரை அடுத்து ஒருவரை விடாமல் துரத்திச் சென்று அந்த நாய் கடித்தது. இதைப்பார்த்ததும் பயத்தில் அங்கிருந்த பொதுமக்கள் அலறடித்து ஓடினர். சிலர் நாயை அங்கிருந்து விரட்ட முயன்றனர். எனினும் நாய் அவர்களை விடாமல் கடித்தது. நடந்து சென்றவர்கள் மட்டுமில்லாமல், மாடுகள், இருசக்கர வாகனத்தில் சென்றவர்களையும் பதம் பார்த்தது.
பொதுமக்கள் திரண்டு விரட்டியதும் அந்த நாய் அங்கிருந்து சர்வீஸ் சாலை வழியாக ஓடியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நாய் சுமார் 30 பேரை கடித்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சத்துவாச்சாரி பகுதியில் மாநகராட்சி சார்பில் நாய்களை பிடிக்கும் பணி நடந்தது.
சத்துவாச்சாரி கெங்கை அம்மன் கோவில் வளாகம் பெரிய தெரு பள்ளிக்கூட தெரு கானார் தெரு பகுதிகளில் சுற்றித்திரிந்த தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் வலைகள் மற்றும் சுருக்கு கம்பிகளைக் கொண்டு பிடித்தனர். ஆனாலும் பொது மக்களை கடித்த வெறிநாய் பிடிபடவில்லை.
இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உறைந்திருந்தனர். இந்த நிலையில் கானாறு தெருவில், வீட்டின் பின்புறம் உள்ள புதரில் பதுங்கி இருந்த வெறி நாய் திடீரென தானாகவே இறந்த நிலையில் கிடந்தது. அதனை அப்புறப்படுத்தினர்.
இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.






