என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொய்கை மாட்டு சந்தையில் சேரும், சகதியுமாய் கிடக்கும் அவலம்
- வியாபாரிகள், விவசாயிகள் கடும் அவதி
- அடிப்படை வசதிகள் இல்லை என புகார்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று மாட்டுச்சந்தை நடைபெறுகிறது.
இந்த சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான கால்நடைகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இது தவிர சண்டை சேவல்கள், கோழிகள், புறாக்களும் ஒருபுறம் விற்பனை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாலை நேரத்தில் காய்கறி சந்தையும் நடக்கிறது.
செவ்வாய் கிழமை தோறும் நடைபெறும் காய்கறி சந்தைக்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் விளையும் காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
இங்கு வாரந்தோறும் பல லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இதன்மூலம் அரசுக்கும் வருவாய் கிடைக்கிறது. ஆனால் இங்கு அடிப்படை வசதி என்பது இல்லை.
கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால், மாட்டு சந்தை முழுவதும் குளம்போல் மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது. சந்தை வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இன்று சுமார் ஆயிரம் கால்நடைகள் விற்பனைக்கு வந்தது. ஆனால் இந்த நிலைமையை பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கால்நடைகளை முழங்கால் சேற்றில் நிற்க வைத்து விற்பனை செய்தனர்.
சேரும் சகதியுமான இடங்களிலேயே காய்கறி கடைகளும் அமைக்கப்பட்டு விற்பனை நடந்தது. தற்போது டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இங்கு தேங்கியுள்ள நீரில் உள்ள கொசுக்களால் தங்களுக்கும் காய்ச்சல் வருமோ என இன்று சந்தைக்கு வந்தவர்கள் பீதி அடைந்தனர்.
எனவே இந்த மாட்டு சந்தையில் அடிப்படை வசதிகள் மற்றும் மழைநீர் தேங்காத வகையில் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என வியாபாரிகள், விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:-
இந்த மாட்டு சந்தை 3 தலைமுறையாக நடந்து வருகின்றது. அடிப்படை வசதிகள் இல்லாததால் 2 மணி வரை நடக்கும் மாட்டு சந்தை 10 மணிக்குள்ளாகவே சந்தைகள் முடிந்து விடுகிறது.
இந்த சந்தைக்கு வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வருவதால் தங்கும் விடுதி, கழிப்பிட வசதி, மாடுகளை வாகனத்தில் ஏற்ற மேடை ஆகியவற்றை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.






