என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மலையில் சாராய வேட்டை நடத்திய கலெக்டர் மீது கல்லை உருட்டி விட்டு தப்பிய கும்பல்
    X

    சாத்கர்மலையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சாராய கும்பல் வைத்திருந்த வெல்ல மூட்டைகளை கைப்பற்றி அழித்த காட்சி.

    மலையில் சாராய வேட்டை நடத்திய கலெக்டர் மீது கல்லை உருட்டி விட்டு தப்பிய கும்பல்

    • 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு
    • 5 மூட்டை வெல்லம், பேரல், அடுப்புகள் அழிக்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் மலைப்பகுதியில் பால் சுனை, மாமரத்து பள்ளம், அல்லேரி, கங்காச்சாரம், பன்னீர் குட்டை ஆகிய இடங்களில் வற்றாத நீரோடைகள் உள்ளன. இதை பயன்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பல் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேரணாம்பட்டுக்கு திடீரென சென்று ஆயிரம் அடி உயரம் செங்குத்தான சாத்கர் மலைப்பகுதியில் 4 கிலோ மீட்டர் நடந்து சென்றார்.

    கரடு முரடான மலை குன்றுகளுக்கு இடையே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று ஆய்வு செய்தார். கலெக்டர் இந்த மலைப்பகுதிக்கு வருவது குறித்து உள்ளூர் வருவாய் துறையினர் போலீசாருக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

    சப் கலெக்டர் தனஞ்செயன் மலைப்பகுதிக்கு சென்ற பிறகுதான் வருவாய்த்துறையினர் பேரணாம்பட்டு போலீசார் வனத்துறையினருக்கு தெரிய வந்தது. அவர்கள் அவசரமாக அவசரமாக மலைப்பகுதிக்கு பதறியடித்து சென்றனர்.

    கலெக்டர் மீது கல்லை உருட்டி விட்ட கும்பல்

    சாத்கர் மலைப்பகுதி கங்காச்சாரம் என்ற இடத்தில் நின்ற கலெக்டர் குமாரவேல் பாண்டியனை பார்த்து அங்கிருந்து 4 பேர் கொண்ட கள்ளச்சாராய கும்பல் மலையிலிருந்து கல்லை கலெக்டர் மீது உருட்டி விட்டனர்.

    அது சற்று தள்ளி வந்ததால் அவருக்கு எதுவும் ஆகவில்ல. இதை சற்றும் எதிர்பாராத கலெக்டர் மற்றும் வருவாய் துறையினர் திடுக்கிட்டனர். இதை யடுத்து சாராய கும்பல் அங்கிருந்து மலைப்பகுதியில் தப்பி ஓடிவிட்டனர். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேரணாம்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் தேவபிரசாத்தை அழைத்து கல்லை உருட்டிவிட்டு தப்பிய சாராய கும்பலை கைது செய்ய உத்தரவிட்டார்.

    சுமார் 4 மணி நேரம் கலெக்டர் அந்த மலையில் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டார். அங்கு கள்ளச்சாயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 5 மூட்டை வெல்லம் பட்டைகள் மற்றும் 4 பேரல் ஊரல்கள் மற்றும் அடுப்புகள் ஆகியவற்றை கைப்பற்றி அழித்தார். அதன் பின்னர் பேரணாம்பட்டு ஒன்றியம் பத்தலப்பள்ளி ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலெக்டர் இந்த அதிரடி ஆய்வு பேரணாம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×