என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாக்டர் எனக்கூறி கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க முயன்ற போதை வாலிபர்
    X

    டாக்டர் எனக்கூறி கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க முயன்ற போதை வாலிபர்

    • பிரசவ வார்டில் நுழைந்து அட்டகாசம்
    • மாவட்ட நிர்வாகம் தீவிர விசாரணை நடத்த வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு குடியாத்தம் மட்டுமல்லாது சுற்றுப்புற பகுதியில் உள்ள கேவி குப்பம், பரதராமி, ஒடுகத்தூர் பள்ளிகொண்டா, பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    மேலும் குடியாத்தம் அரசு மருத்துவமனை வேலூர் மாவட்டத்திலேயே அதிக பிரசவம் நடைபெறும் மருத்துவமனையாக உள்ளது.இந்த குடியாத்தம் அரசு மருத்துவமனையை நம்பியே இப்பகுதியில் உள்ள ஏழை எளியோர், நடுத்தர வர்கத்தினர், தொழிலாளர்கள் உள்ளனர் அவர்களின் வீட்டு கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையே நம்பி உள்ளனர்.

    குடியாத்தம் அடுத்த தனகொண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அந்த கூலி தொழிலாளியின் மனைவி பிரசவத்திற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சில நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். ஓரிரு தினங்களில் பிரசவம் ஆகும் என டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு கூலி தொழிலாளியின் மனைவி பிரசவ வார்டில் இருந்துள்ளார். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் முகத்திற்கு மாஸ் அணிந்து கொண்டும் கையில் கிளவுஸ் அணிந்து கொண்டும் டாக்டர் எனக்கூறி பிரசவ வார்டுக்குள் நுழைந்து பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த அந்த கூலி தொழிலாளியின் மனைவியை பரிசோதனை செய்துள்ளார்.

    அப்போது குடிபோதை வாடை வீசவே ஆண் டாக்டர் தங்களை பரிசோதித்ததை கண்டு அதிர்ச்சடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார்.

    இதனை அடுத்து பிரசவ வார்டுக்கு வெளியே இருந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்றனர். அதற்குள் அந்த டாக்டர் எனக் கூறிக்கொண்டு உள்ளே இருந்த மர்ம நபர் வெளியே வந்துள்ளார்.

    அவரை பிடித்து விசாரித்த போது குடிபோதையில் அவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். உடனடியாக குடியாத்தம் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த டவுன் போலீசார் அந்த நபரை பிடித்து குடியாத்தம் போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது குடிபோதை யில் இருந்த அந்த நபர் தன்னுடைய பெயர் சுகுமார் என்றும் வயது 36 என்றும் வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் முன்னுக்கு பின்னாக மாற்றிக் கூறிக் கொண்டு வந்துள்ளார்.

    பிரசவ வார்டில் பெண் மருத்துவர்கள் பெண் செவிலியர்கள் மட்டுமே கர்ப்பிணிகளை பரிசோதனை செய்வார்கள் பெண் டாக்டர்கள் கர்ப்பிணிகளை பரிசோதனை செய்யும்போது உடன் செவிலியர்கள் இருப்பார்கள் ஆனால் ஒரு ஆண் எப்படி பிரசவ வார்டுக்குள் டாக்டர் என்று கூறிய உள்ளே நுழைந்தார் என அதிர்ச்சியாக உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து அந்த தொழிலாளியின் உறவினர்கள் கூறியதாவது:-

    பெண்ணின் ஆண் உறவினர்கள் பிரசவ வார்டில் அனுமதிக்காத போது எப்படி டாக்டர் எனக் கூறிக்கொண்டு குடிபோதையில் ஒரு நபர் உள்ளே அனுமதிக்கப்பட்டார் அவர் எடக்கு மடக்காக பரிசோதனை என்ற பெயரில் கர்ப்பிணி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருந்தாலும் அல்லது வயிற்றில் இருந்த குழந்தைக்கு ஆபத்து ஏற்பட்டு இருந்தாலும் யார் பொறுப்பு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பாதுகாவலர்கள் உள்ளனர் இவ்வளவு அலட்சியமாக இருப்பார்களா என தெரியவில்லை இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் தீவிரமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×