என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை
    X

    ஒடுகத்தூரில் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலத்தில் மழைநீர் தேங்கியுள்ள காட்சி.

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை

    • விவசாயிகள் மகிழ்ச்சி
    • நிலங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதேபோல் நேற்று பகல் வழக்கம்போல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. 100 டிகிரி வெயில் பதிவானது. மாலை 5 மணியளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கருமேகங்கள் திரண்டு இருள் சூழ்ந்தது. மாலை 6 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. முதலில் மிதமாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல கனமழை கொட்டித்தீர்த்தது. அப்போது இடி, மின்னல், காற்றுடன் 1½ மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது.

    அதன்பிறகு விடியும் வரை சீராக மழை பெய்தது. இதனால் தெருக்கள், சாலையோரம் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. கிரீன் சர்க்கிள், திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையம், காமராஜர் சிலை அருகே, ஆற்காடு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

    வேலூர் மாவட்டத்தில் குடியாத்தத்தில் அதிகபட்சமாக 34 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. அதேபோல் வேலூரில் 32 மில்லி மீட்டர், காட்பாடியில் 32 மில்லி மீட்டர், மேல் ஆலத்தூரில் 30.20 மில்லி மீட்டர், கே.வி. குப்பத்தில் 26.80 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூர் சுகர் மில் பகுதியில் 23 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதேபோல் ஆலங்காயத்தில் 21 மில்லி மீட்டர், வாணியம்பாடியில் 19 மில்லி மீட்டர், ஆம்பூரில் 14.60 மில்லி மீட்டர், ஆம்பூர் சுகர் மில் பகுதியில் 9.60 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிபாக்கத்தில் அதிகபட்சமாக 60 மில்லி மீட்டர் மழை பதிவானது. பனப்பாக்கத்தில் 48 மில்லி மீட்டர், அம்மூரில் 48 மில்லி மீட்டர், கலவையில் 37.2 மில்லி மீட்டர், வாலாஜாவில் 25 மில்லி மீட்டர், பாலாறு அணைக்கட்டில் 24 மில்லி மீட்டர், ராணிப்பேட்டையில் 21.8 மில்லி மீட்டர், ஆற்காட்டில் 21.2 மில்லி மீட்டர், மின்னல் பகுதியில் 21.2 மில்லி மீட்டர், அரக்கோணத்தில் 18.4 மில்லி மீட்டர், சோளிங்கரில் 7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெய்த பரவலான மழையால் பல்வேறு பகுதிகளில் குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்கியது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. தொடர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஒடுகத்தூர் மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாய நிலங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.

    இதனால் நெல், மணிலா உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×