என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டராக விருப்பம் தெரிவித்த பள்ளி மாணவியை தனது இருக்கையில் அமர வைத்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன்.
கலெக்டராக விருப்பம் தெரிவித்த மாணவியை தனது இருக்கையில் அமர வைத்த கலெக்டர்
- வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது
- ஆசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
குழந்தைகள் தினத்தையொட்டி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சியில் சத்துவாச்சாரியை சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
அப்போது கலெக்டர் ஒவ்வொரு மாணவர்களிடம் தாங்கள் எதுவாக விருப்பம் உள்ளது என கேட்டார். மாணவர்கள் டாக்டர் கலெக்டர் போலீசாக விருப்பம் தெரிவித்தனர்.
கலெக்டராக விருப்பம் தெரிவித்த மாணவியை தனது இருக்கையில் அமர வைத்து, கலெக்டராக எப்படி படிக்க வேண்டும் என்னென்ன படிக்க வேண்டும் என்பது குறித்து மாணவிக்கு எடுத்து ரைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில்:-
நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் பள்ளி முதல் கல்லூரி படிப்பு வரை 20 ஆண்டுகள் விடுதியில் தங்கி படித்தேன்.
அப்போதெல்லாம் விவசாயம் தேவை இல்லாத தொழில் என ஒதுக்கி வைத்த காலம். நானும் 6 ஆண்டு காலம் விவசாயம் செய்து வந்தேன். அப்போது என்னுடைய பெற்றோர் வேறு வேலைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதையடுத்து குரூப் ஒன், யு பி எஸ் சி தேர்வு எழுதி வெற்றி பெற்று உதவி கலெக்டராக வேலை செய்து வந்தேன். தற்போது கலெக்டராக உள்ளேன். மாணவர்கள் சிறு வயதிலேயே தாங்கள் என்னவாக வரவேண்டும் என ஒரு இலக்கை நிர்ணயித்து அதை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை கூர்மையாக கவனித்து மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






